
பிரதமர் அலுவலகத்தின் (PMO) புதிய வளாகத்திற்கு 'சேவா தீர்த்த்' (Seva Teerth) எனப் பெயரிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'குடிமக்களே முதன்மை' என்ற அரசின் நிர்வாகக் கொள்கைக்கு ஏற்ப இந்தப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
மத்திய அரசு வட்டாரங்களின்படி, 'சேவா தீர்த்த்' என்பது சேவை மனப்பான்மையைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பணிக்கூடமாக இருக்கும். சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், இறுதிக்கட்டப் பணிகளில் உள்ள இந்த புதிய வளாகம், முன்பு 'எக்ஸிகியூட்டிவ் என்கிளேவ்' (Executive Enclave) என்று அறியப்பட்டது.
பிரதமர் அலுவலகம் (PMO) மட்டுமல்லாது, அமைச்சரவைச் செயலகம், தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலகம் மற்றும் இந்தியாவுக்கு வருகை தரும் உயர்நிலை பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இடமாக செயல்படும் இந்தியா ஹவுஸ் அலுவலகமும் இந்த வளாகத்தில் இடம்பெறும்.
அண்மையில் மாநில ஆளுநர்களின் அதிகாரப்பூர்வ இல்லங்களான ராஜ் பவன்கள் 'லோக் பவன்' என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் 2016ஆம் ஆண்டில் 'லோக் கல்யாண் மார்க்' என்று பெயர் மாற்றப்பட்டது. மத்தியச் செயலகம் 'கர்த்தவ்ய பவன்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், ராஜ் பாத் (Rajpath) என்பது 'கர்த்தவ்யா பத்' (Kartavya Path) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.