கர்நாடகாவில் பேருந்து கட்டண உயர்வு! ஏர்போர்ட் டிக்கெட் ரூ.300 க்கு மேல்!

By SG Balan  |  First Published Jan 5, 2025, 11:46 PM IST

Karnataka bus fare hike: பிரீமியம் பேருந்துகள் உட்பட அனைத்து வகை பேருந்துகளுக்கும் கட்டண உயர்வு பொருந்தும். ஏசி அல்லாத பேருந்துகளுக்கு ஜிஎஸ்டி இல்லை என்றாலும், ஏசி பேருந்துகளில் ஜிஎஸ்டியும் விதிக்கப்படுவதால் விலை மேலும் அதிகரிக்கிறது.


கர்நாடக மாநிலத்தில் 15 சதவீதம் பேருந்துக் கட்டண உயர்வு உள்ள அனைத்து சாலைப் போக்குவரத்துக் கழகங்களிலும் (ஆர்டிசி) ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்துவிட்டது. போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடு மற்றும் நிதி சவால்களை சமாளிக்க பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதற்கு மாநில அமைச்சரவை நிர்வாக ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இதற்கு முன்பாக 2020 இல் பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC) மற்றும் கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) ஆகியவற்றின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளுக்குக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் (NWKRTC) மற்றும் கல்யாண் கர்நாடகா போக்குவரத்துக் கழகம் (KKRTC) ஆகியவற்றுக்கான கட்டணத் திருத்தம் கடந்த 2015ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

Tap to resize

Latest Videos

பெங்களூருவில் உள்ள முக்கியமான பிஎம்டிசி வழித்தடங்களில், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு பஸ் டிக்கெட்டுக்கு ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எச்ஏஎல் மெயின் கேட், பனசங்கரி டிஎம்சி, கடுகோடி, எச்எஸ்ஆர் பிடிஏ வளாகம் மற்றும் கெம்பேகவுடா பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து விமான நிலையம் செல்வதற்கான டிக்கெட் கட்டணம் முறையே ரூ.310, ரூ.320, ரூ.330, ரூ.300 மற்றும் ரூ.290 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, கெம்பேகவுடா பேருந்து நிலையம்-கடுகோடி, பனசங்கரி-ஹெப்பால், மத்திய பட்டு வாரியம்-கடுகோடி, கெம்பேகவுடா பேருந்து நிலையம்-பன்னர்கட்டா உயிரியல் பூங்கா போன்ற முக்கிய வழித்தடங்களின் டிக்கெட் விலை ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது.

குளிரூட்டப்படாத கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளில், டிக்கெட் கட்டணம் ரூ.21 முதல் 88 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பிரீமியம் பேருந்துகள் உட்பட அனைத்து வகை பேருந்துகளுக்கும் கட்டண உயர்வு பொருந்தும். ஏசி அல்லாத பேருந்துகளுக்கு ஜிஎஸ்டி இல்லை என்றாலும், ஏசி பேருந்துகளில் ஜிஎஸ்டியும் விதிக்கப்படுவதால் விலை மேலும் அதிகரிக்கிறது.

விலை உயர்வை ஆதரித்துப் பேசியுள்ள கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, ஊழியர்களின் சம்பள உயர்வு, எரிபொருள் செலவு, பராமரிப்பு செலவுகள் ஆகியவை காரணமாக நிதிச்சுமை அதிகரித்து வருவதால் கட்டண உயர்வு அவசியமாகிவிட்டது என்கிறார்.

மாநிலப் போக்குவரத்துத் துறையின் கணக்குப்படி, மாநகராட்சிகளுக்கு தினசரி ரூ.9.56 கோடி கூடுதல் செலவாகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.3,650 கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க, நான்கு மாநகராட்சிகளிலும், 15 சதவீதம் பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

நான்கு சாலைப் போக்குவரத்துக் கழகங்களும் கூட்டாக 25,337 பேருந்துகளை இயக்குகின்றன. அவற்றில் தினமும் சராசரியாக 116.18 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். பெண்கள் இலவசப் பயணம் செய்ய சக்தி யோஜனா செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தினமும் சுமார் 64 லட்சம் பெண் பயணிகள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்கின்றனர். இதுதவிர போக்குவரத்துக் கழகங்களில் 1,01,648 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். கிடைக்கும் வருவாய் அவர்களின் சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றுக்கே சரியாக உள்ளது என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

click me!