
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் வரும் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, நேச்சுரோபதி, யுனானி உள்ளிட்ட படிப்புகளுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் என மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் வௌியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது-
எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பிற்கு ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்தாண்டு சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் ஆயுஸ் நடத்தும் பட்டப்படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்துவது குறித்து குறிப்பிடப்படவில்லை. மருத்துவக் கல்வியின் தரத்தை கருத்தில் கொண்டு ஆயுஸ் வழங்கும் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட வேண்டும்.
ஏற்கனவே உள்ள இன சுழற்சியின் படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். எனினும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் இந்த கல்வி ஆண்டு ஆயுஸ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அந்தந்த மாநில அரசே பொது நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தலாம்.
ஆனால், அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையிலேயே ஆயுஸ் வழங்கும் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் மாணவர்களை சேர்க்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு கடந்த மாதம் 26ம் தேதியே அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பாளையங்கோட்டை, சென்னையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளும், நாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியும் உள்ளன.
இதுகுறித்து ஆலோசனை நடத்த சித்தா, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் கூட்டம் சென்னையில் 22ம் தேதி நடக்கிறது. அந்த கூட்டத்தில் இந்த உத்தரவு குறித்து விவாதிக்கப்படுகிறது.