நீட் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வி !! தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி !!

By Selvanayagam PFirst Published Jun 5, 2019, 8:00 PM IST
Highlights

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், அதில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) முடிவின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த தேர்வு கடந்த மாதம் ஒடிசாவை தவிர்த்து பிற மாநிலங்களில் 5-ம் தேதியும், ஒடிசாவில் 20-ம் தேதியும் நடைபெற்றது. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று மதியம் இணையத்தில் வெளியிட்டது. 

இதில் தேசிய அளவில் 56.50 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராஜஸ்தானை சேர்ந்த நலின் கந்தேல்வால்  தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 720க்கு 701 மதிப்பெண் பெற்றுள்ளார். ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேச மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி 685 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 57-வது இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்துள்ளார்

இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத திருப்பூரை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தான் தேர்ச்சி பெறமுடியவில்லையே என்ற வேதனையில் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். 

ரிதுஸ்ரீ 12-ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் எடுத்துள்ள நிலையில், நீட் தேர்வில் தோல்வியுற்றதால் இந்த துயர முடிவை எடுத்துள்ளதாக அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். இதில் மேலும் துயரம் என்னவெனில் நன்றாக படிக்க கூடிய மாணவி ரிதுஸ்ரீ, நீட் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்றதாக கூறப்படுகிறது. 

click me!