
உத்தரப்பிதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் குப்பாபூர் கிராமத்தில் உள்ள நேஹா பப்ளிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவன் ஒருவனை, வேற்று மதத்தை சேர்ந்த சக மாணவர்கள் அடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியை அடிக்கச் சொன்னதன் பேரில், அந்த மாணவனை சக மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக வந்து கன்னத்திலும், முதுகிலும் அடிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
வாய்ப்பாடு சரியாகச் சொல்லாததால் திரிப்தா தியாகி எனும் ஆசிரியை அந்த மாணவனை அடிக்கச் சொன்னதாக கூறப்படுகிறது. மேலும், அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட மாணவனின் மதம் குறித்தும் அந்த ஆசிரியை சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனது வகுப்பறையில் மாணவனை அடிக்குமாறு சக மாணவர்களை அறிவுறுத்திய ஆசிரியர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம் முசாபர்நகர் மூத்த காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும். எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச்சட்டம் 2009 சட்டப்பிரிவு 17ன் கீழ் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முசாபர்நகர் மாவட்ட ஆட்சியருக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
துணை ராணுவத்தினருக்கு சிறுதானிய உணவுகள்: சமையலர்களுக்கு பயிற்சி!
அந்த பள்ளிக்கு அங்கீகாரம் உள்ளதா இல்லையா? இருந்தால் அங்கீகார சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை, மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தகுதிகள் மற்றும் குழந்தை உரிமைகள் குறித்து ஆசிரியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ஏதேனும் வழிகாட்டுதல் அல்லது பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா என்ற விவரங்களையும் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வீடியோவின் அடிப்படையில் இந்த பிரச்சினையை தானாக முன்வந்து எடுத்துக் கொண்ட தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், துன்புறுத்தப்பட்ட குழந்தை மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு தேவை என்பதால், குழந்தைகள் நலக் குழுவின் அனைத்து குழந்தைகளையும் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்றும், தேவையான ஆலோசனைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.