அஜித் பவார் கைக்கு செல்லும் என்சிபி? சிவசேனா போல் நடக்க வாய்ப்பு!

Published : Jul 02, 2023, 05:11 PM IST
அஜித் பவார் கைக்கு செல்லும் என்சிபி? சிவசேனா போல் நடக்க வாய்ப்பு!

சுருக்கம்

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, அக்கட்சியின் அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராக பதவியேற்றியுள்ளார்

மகாராஷ்டிரா அரசியல் மீண்டும் ஒரு முறை தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றுள்ளார். இன்று காலை வரை, மகாராஷ்டிர அரசியலில் அமைதி நிலவிய நிலையில், இந்த எதிர்பாராத திருப்பம் தேசிய அரசியல் அரங்கில் ஆச்சரியத்தையும், சலசலப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவுக்கும்,  சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித் பவாருக்கும் இடையே கட்சியை கைப்பற்றுவதில் அண்மையில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, சரத் பவார் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் தலையீட்டால், அந்த பிரச்சினை சுமூகமாக முடிக்கப்பட்டது. ராஜினாமா செய்யும் முடிவை எடுத்த அவர், மீண்டும் கட்சியின் தலைவரானார். அதன் தொடர்ச்சியாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே மற்றும் ப்ரஃபுல் படேல் ஆகியோரை சரத் பவார் நியமித்தார்.

இதனால், அதிருப்தியில் இருந்த அஜித் பவார், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். அவருடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதில் பெரும்பாலானோர் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்பது இது ஐந்தாவது முறையாகும். அதில், தற்போதைய சட்டப்பேரவை பதவிக்காலத்தில் மட்டும் 3ஆவது முறையாக துணை முதல்வராக அவர் பதவியேற்றுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜவின் தேவேந்திர பட்னாவிசுடன் இணைந்து அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து 8 மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்த அவர், மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே இணைந்தார். அதன்பிறகு, உத்தவ்தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்த போது, அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். தற்போது, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராக பதவியேற்றியுள்ளார்.

முன்னதாக, மும்பையில் உள்ள தனது இல்லத்தில் அஜித் பவார் சில கட்சி தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்தார். ரகசியமாக நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து என்சிபி தலைவர் சரத் பவார் அறிந்திருக்கவில்லை. “இந்தக் கூட்டத்திற்கு ஏன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால், எம்எல்ஏக்கள் கூட்டத்தை அழைக்க அவருக்கு (அஜித் பவாருக்கு) உரிமை உள்ளது. அவர் அதை வழக்கமாக செய்கிறார். இந்த சந்திப்பு பற்றி அதிக விவரங்கள் எனக்கு தெரியாது.” என்று சரத் பவார் தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, நிகழ்ந்த இந்த அரசியல் மாற்றம், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவசேனா கட்சிக்கு ஏற்பட்ட நிலைமை, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்படலாம் எனவும், ஏக்நாத் ஷிண்டேவிடம் சிவசேனா சென்றது போலவே, அஜித் பவார் கைகளுக்கு தேசியவாத காங்கிரஸ் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிர துணை முதல்வராக பொறுப்பேற்றார் அஜித் பவார் - சரத் பவாருக்கே தெரியாமல் நடந்த விஷயம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்த பாஜக - சிவசேன ஆகிய கட்சிகள் இடையே ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, சரத் பவார் தலையீட்டின் பேரில், எதிரெதிர் துருவங்களான சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தமது தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து  மகா விகாஸ் அகாடி எனும் கூட்டணியை அமைத்தார்.

தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார். இரண்டரை ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அன்றைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். உட்கட்சி பிரச்சினை காரணமாக சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் முதல்வரானார். சிவசேனா கட்சியும் அவர் வசம் சென்றுள்ளது. தற்போது உத்தவ் தாக்கரே அணியினர் (சிவசேனா - உத்தவ் பாலாசாகேப் தாக்கரே அணி - UBT)  என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர்.

மகராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவைத் தொகுதிகளும், 288 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளதால், எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் இம்மாநிலத்தின் மீது அரசியல் கட்சிகளின் பார்வை விழுந்துள்ளது. அதேசமயம், பாஜகவை மத்தியில் ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதில், மூத்த அரசியல் தலைவரான சரத் பவாரின் பங்கு கணிசமாக உள்ளது.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியில், 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதில், அஜித் பவாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளிக்கின்றனர் என்ற உறுதியான தகவல் இல்லை என்றாலும், 40 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. அதில், 30 எம்.எல்.ஏ.க்கள் (அஜித் பவாரையும் சேர்த்து) வெளிப்படையாக அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய பதவியேற்பு விழாவில் அஜித் பவாரையும் சேர்த்து தேசியவாத காங்கிரஸ்  கட்சியின் 30 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கியபோது, சிவசேனாவின் 55 எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் அவருக்கு ஆதரவு அளித்தனர். மக்களவை உறுப்பினர்கள் 18 பேரில் 13 பேர் அவருக்கு ஆதரவளித்தனர். பாஜக ஆதரவுடன் சிவசேனா கட்சி ஏக்நாத் ஷிண்டே வசம் சென்றது. இந்த பின்னணியில், தற்போது, தேசியவாத காங்கிரஸின் 53 எம்.எல்.ஏ.க்களில், 40 பேர் அஜித் பவாருக்கு ஆதரவளிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் பாஜகவின் ஆதரவும் இருக்கும் பட்சத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் கைகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அஜித் பவார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள சரத் பவார், இது ஒன்றும் தனக்கு புதிதல்ல என கூறியுள்ளார். “இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. 1980ல் நான் தலைமை வகித்த கட்சியில் 58 எம்எல்ஏக்கள் இருந்தனர், பின்னர் அனைவரும் வெளியேறி 6 எம்எல்ஏக்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். ஆனால் நான் எண்ணிக்கையை பலப்படுத்தினேன், என்னை விட்டு சென்றவர்கள் தங்கள் தொகுதிகளில் தோற்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ
Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!