
இந்திய செய்தி சேனல்களில் ஒளிரப்பாகும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் தடை விதிப்பதாக செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக சங்கம் (NBDA) ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
"அவசரம் மற்றும் ரகசியம்" என்ற குறிப்புடன் வெளியாகியுள்ள இந்த உத்தரவு NBDA உறுப்பு அமைப்புகளில் உள்ள ஊடகங்களின் ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரராக பரப்புரையில் ஈடுபடும் பாகிஸ்தானியர்களைப் பேச அழைக்கக் கூடாது என்று இந்த உத்தரவு தெளிவுபடுத்துகிறது.
ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் 26 பொதுமக்கள் பலியானார்கள். அதற்குப் பிறகு இந்திய அரசு எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளின் பகுதியாக இந்த உத்தரவு அமைந்துள்ளது.
"பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான சமீபத்திய தாக்குதலைக் கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கு எதிராக தவறான பிரச்சாரத்தைப் பரப்பும் பாகிஸ்தானைச் சேர்ந்த, இந்தியாவுக்கு எதிரான பேச்சாளர்களை தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கும் சேனல்கள் மீது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது" என்று NBDA தெரிவித்துள்ளது.
டிவி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் வரும் நிகழ்ச்சிகளை பாகிஸ்தானின் குரலை எதிரொலிக்கும் வகையில் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான பதில் நடவடிக்கைகளில் ஒன்றாக ஏப்ரல் 28ஆம் தேதி வன்முறை மற்றும் வகுப்புவாதத்தைத் தூண்டும் 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் தடைசெய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து இப்போது, இந்திய ஊடகங்களில் பாகிஸ்தானின் பங்கேற்பு மீதான கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான வர்த்தக உறவுகள் சரிந்துள்ளன. பாகிஸ்தானில் இருந்து நேரடி மற்றும் மறைமுக இறக்குமதிகள் இரண்டிற்கும் தடைகள் உட்பட, இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்கள் நிறுத்துவதையும் தடை செய்துள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானிலிருந்து வந்த பொருட்கள் துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன. இது பாகிஸ்தானில் உள்ள சிறு வணிகர்களைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் பதில் நடவடிக்கை பொருளாதாரம் மற்றும் ஊடகக் கட்டுப்பாடுகளுடன் நின்றுவிடவில்லை. பஹல்காம் தாக்குதலைத் தாக்குதலைத் தொடர்ந்து, அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டு, பல ஆண்டுகளாக நீடித்து வந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) பகுதியில் பதட்டங்கள் நீடிக்கின்றன. கடந்த சில நாட்களாகவே காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்கள் நடந்தியதாகவும் இந்தியா அதற்கு தக்க பதிலடி கொடுத்தது என்றும் கூறப்படுகிறது.