national herald case: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுலுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்

By Pothy RajFirst Published Jun 1, 2022, 1:56 PM IST
Highlights

National Herald case, :நேஷனல் ஹெரால்ட் நாளேடு வழக்கில் காங்கிரஸ்இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்திக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நேஷனல் ஹெரால்ட் நாளேடு வழக்கில் காங்கிரஸ்இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்திக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் மூலம், நேஷனல் ஹெரால்டு என்ற நாளேடு தொடங்கப்பட்டது. இந்தநிறுவனத்தை நடத்த ரூ.90 கோடியை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. இந்த கடனை திருப்பிச் செலுத்தாமல் நேஷனல் ஹெரால்ட் நிறுவனம் நஷ்டப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு நாளேடு நிறுத்தப்பட்டது. 

இந்த நிறுவனத்தின் பங்குகளை ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டபோது, அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களின் ஒப்புதல்களைப்பெறவில்லை. இந்த நிறுவனத்தின் 76% பங்குகள் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடமும், 24 % பங்குகள் ராகுல் காந்தியிடமும் உள்ளன. 

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள அசோசியேட்டட் ஜர்னல் பங்குகளை வெறும் ரூ.50 லட்சத்துக்கு மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி  வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தொடர்பாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, எம்.பி.ராகுல் காந்திக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறுகையில் “எதிர்க்கட்சிகளை மிரட்ட விசாரணை அமைப்புகளை பொம்மைபோல் ஆட்டுவித்து பாஜக அரசு பயன்படுத்துகிறது. நேஷனல் ஹெரால்டு வரலாற்றுக்கு சுதந்திரத்துக்கு முந்தைய காலத்துக்குச் செல்ல வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்கள் மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் மத்திய விசாரணை அமைப்புகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

2015ம் ஆண்டு நேஷல் ஹெரால்டு வழக்கை அமலாக்கப்பிரிவு முடித்துவிட்டது. ஆனால், அரசு அவ்வாறு நடக்கவில்லை. அந்த வழக்கை முடித்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகளைநீக்கிவிட்டு,  புதிய அதிகாரிகளை நியமித்த மத்திய அரசு, அந்த வழக்கை தோண்டி எடுக்கிறது. பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் அதிலிருந்து திசை திருப்ப இதை மத்திய அரசு செய்கிறது” எனத் தெரிவித்தார்

click me!