உலகம் முழுக்க 24 நாடுகளை சேர்ந்த சுமார் 400 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
குரங்கு அம்மை நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெளியிடப்பட்டு உள்ளது. உலகம் முழுக்க 24 நாடுகளை சேர்ந்த சுமார் 400 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்பு யாராக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், பல நாடுகளில் பரவி வருவதை அடுத்து, இதை தடுப்பதற்காக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.
எச்சரிக்கை அவசியம்:
சர்வதேச பயணிகள் உயிருடனோ அல்லது இறந்து கிடக்கும் விலங்குகளின் அருகில் செல்லக் கூடாது. இதில் எலி, அனில், குரங்கு என அனைத்து விதமான விலங்குகளும் அடங்கும். இத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய உடை, மெத்தை மற்றும் இதர பொருட்களை தொடுவதை தவிர்க்க வேண்டும். மாநிலங்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குரங்கு அம்மை பாதித்தவர்கள் மற்றும் மொத்தமாக பாதித்த இடங்களை விரைந்து அடையாளம் காண வேண்டும். நோய் பாதிப்பு பரவுவதை தடுக்க பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
தொடர் கண்காணிப்பு:
குரங்கு அம்மை பாதிப்பு இருக்குமோ என சந்தேகத்துக்கு உரிய மாதிரிகளை சேகரித்து, அவற்றை புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்ப வேண்டும். குரங்கு அம்மை பாதித்தவரின் தொடர்பில் இருந்தவர்களை தொற்று அறிகுறி ஏற்பட்டதில் இருந்து 21 நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
நோயாளிகள் மற்றும் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள் நன்றாக கை சுத்தத்தை பராமரிக்க வேண்டும். கட்டாயம் முழு கவச உடையை அணிந்து கொள்ள வேண்டும். குரங்கு அம்மை பாதித்த நாடுகளுக்கு சென்று வந்து அறிகுறிகளுடன் காணப்படும் நோயாளிகளை அனைத்து மருத்துவமனைகளிலும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.