
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனிய காந்தி நேரில் ஆஜராகக் கூறி அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
வரும் 21்ம் தேதி அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகத்துக்கு சோனியா காந்தியை நேரில் ஆஜராக அமலாக்கப்பிரிவு நோட்டீஸில் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 23ம் தேதிக்குப்பின், அமலாக்கப்பிரிவு சோனியா காந்திக்கு விடுக்கும் 2-வது சம்மன் இதுவாகும்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் மூலம், நேஷனல் ஹெரால்டு என்ற நாளேடு தொடங்கப்பட்டது. இந்தநிறுவனத்தை நடத்த ரூ.90 கோடியை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. இந்த கடனை திருப்பிச் செலுத்தாமல் நேஷனல் ஹெரால்ட் நிறுவனம் நஷ்டப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு நாளேடு நிறுத்தப்பட்டது. பின்னர் 2016ம் ஆண்டு முதல் நேஷனல் ஹெரால்ட் நாளேடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் பங்குகளை ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டபோது, அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களின் ஒப்புதல்களைப் பெறவில்லை. இந்த நிறுவனத்தின் 76% பங்குகள் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடமும், 24 % பங்குகள் ராகுல் காந்தியிடமும் உள்ளன.
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள அசோசியேட்டட் ஜர்னல் பங்குகளை வெறும் ரூ.50 லட்சத்துக்கு மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, எம்.பி.ராகுல் காந்திக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஏற்கெனவே அமலாக்கப்பிரிவு விசாரணையில் ஆஜராகிவிட்டார். அவரிடம் 50 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததையடுத்து, அவர் கடந்த மாதம் 8ம் தேதி விசாரணைக்கு ஆஜராகவி்ல்லை. கொரோனா தொற்று குணமடைந்தநிலையில், கொரோனாவுக்கு பிந்தைய நுரையீரல் பாதிப்பால் சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஜூன் 23ம் தேதி அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி சோனியா காந்தியை விசாரணைக்கு நேரில் ஆஜராக அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், சோனியா காந்தி கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை முடிந்த நிலையில் 4 வாரங்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இ்ந்நிலையில் வரும் 21ம் தேதி சோனியா காந்தி நேரில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.