ஓணம் பண்டிகைக்கு மாட்டிறைச்சி உணவு… தேசியவிருது பெற்ற நடிகைக்கு கடும் மிரட்டல்!

First Published Sep 9, 2017, 3:34 PM IST
Highlights
National award winner Surabhi Lakshmi slammed for eating beef


ஓணம் பண்டிகை அன்று, தேசியவிருது பெற்ற மலையாள நடிகை சுரபி லட்சுமி மாட்டிறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை சாப்பிட்ட காட்சி தொலைக்காட்சியிலும், வலைதளங்களிலும் வெளியாதனதை அடுத்து, அவருக்கு டுவிட்டர், பேஸ்புக்கில் கடும் மிரட்டல் வந்தவாறு உள்ளன.

மாட்டிறைச்சி தடை

பா.ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி விற்பனை செய்யவும், பசு மாடுகளைக் கொல்லவும் தடை உள்ளது. மீறினால், கடும் தண்டனையும் விதிக்கப்படுகிறது. இதேபோல் சமீபத்தில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை கொண்டு வந்தது. அந்த சட்டத்துக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த சட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

கடும் எதிர்ப்பு

மத்திய அரசு கொண்டு வந்த இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்ற அறிவிப்பின்போது, அதை கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்தனர். சாலைகளில் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டு தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மிரட்டல்

இந்நிலையில், ஓணம் பண்டிகையின் போது, தங்கள் பகுதியின் பாரம்பரிய வழக்கத்தின்படி மாட்டிறைச்சி,உள்ளிட்ட அசைவ உணவுகளை சாப்பிட்ட நடிகைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

டி.வி. நிகழ்ச்சி

தேசிய விருதுபெற்ற மலையாள நடிகை சுரபி லட்சுமி. ஓணம் பண்டிகையன்று “சுரபி லட்சுமியுடன் ஒருநாள்” என்ற தலைப்பில் மீடியா ஒன் என்ற சேனல் ஒரு நிகழ்ச்சி நடத்தியது. அதில் காலை முதல் இரவு வரை சுரபி லட்சமியின் செயல்பாடுகள் குறித்து அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதில் கோழிக்கோடு நகரில் வழக்கமாக தான் செல்லும் ஒருஓட்டலில் மாட்டிறைச்சியும், பரோட்டாவும் சுரபி லட்சுமி சாப்பிட்டார். மேலும், வீட்டில் மதியம் ஓணம் சத்யா விருந்தில் கோழிக்கறி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளையும் சாப்பிடுவது போன்ற காட்சிகள் சேனலில் ஒளிபரப்பாகின.

வடபகுதிமக்கள்

பொதுவாக ஓணம் சத்யா விருந்தில் சைவ உணவுதான் பரிமாறப்படும். ஆனால், கேரளாவின் வடபகுதியில் உள்ள கடற்கரை ஓர மக்கள் ஓணம் பண்டிகையின் போது கூட அசைவம் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது தெரியாமல், நடிகை சுரபி லட்சமி அசைவம் சாப்பிட்டதைக் கண்டித்து அவரை டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் கடுமையாக நெட்டிசன்கள் வசைபாடியுள்ளனர்.

கண்டனம், வசை

ஓணம் பண்டிகையில் அசைவம் சாப்பிட்டு இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார் நடிகை சுரபி லட்சுமி என்று டுவிட்டரில் கண்டனம் வரத்தொடங்கின.

மேலும், “சிலர் உங்களின் செயல்பாடுகள் சரியில்லை மாற்றிக்கொள்ளுங்கள்” என்றும், “அடுத்த ஆண்டு சுரபி லட்சுமி பன்றி கறி சாப்பிடுங்கள், அதிலும் ரம்ஜான் பண்டிகைஅன்று சாப்பிடுங்கள்” என்றும், “பணத்துக்காக எந்த அசிங்கமான வேலையையும் நீ செய்வாய்”, “இந்து மதத்தை நீ அவமதித்து விட்டார், ஒரு இந்து என்றுவெளியே சொல்லாதே” என்று பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் கடுமையாக நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வந்தனர்.

போலீசில் புகார்

இன்னும் சிலர் சுரபி லட்சுமிக்கு பிரத்யேகமாக மிரட்டல் விடுத்தும் கருத்துக்களை பகிரந்து இருந்தனர். இதையடுத்து, கேரள இளைஞர் ஆணையம் இது குறித்து போலீசில்புகார் தெரிவித்து, விசாரணை நடத்த உத்தரவிட்டது.

பசிதான் முக்கியம்

இது குறித்து நடிகை சுரபி லட்சு அளித்த விளக்கத்தில், “ நான் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. இந்த நிகழ்ச்சி என்பது ஓணம் பண்டிகைக்கு 3 வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. பொதுவாக கேரளத்தின் வடபகுதி மக்கள் ஓணம் பண்டிகையன்று கூட அசைவ உணவுகள் எடுத்துக் கொள்வது வழக்கம். மனிதர்கள் வாழ்க்கையில் பசி என்பது பிரிக்கமுடியாத ஒன்று. அந்த பசி வரும் போது, நான் மாட்டிறைச்சி அல்லது, கோழிக்கறி அல்லதுபன்றிக்கறி என எதையும் ஒதுக்கமாட்டேன். நான் மாட்டிறைச்சி சாப்பிட்டது இப்போது பிரச்சினையில்லை. அந்த நிகழ்ச்சி ஓணம் பண்டிகையன்று ஒளிபரப்பானதுதான்” எனத் தெரிவித்தார்.

click me!