குஜராத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் 3,300 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், குஜராத் கடற்பரப்பில் பயணித்த படகில் இருந்து 3,300 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த படகில் பாகிஸ்தான் நாட்டவர்கள் இருந்ததாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியக் கடற்படை மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) ஆகியவற்றின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
தலைநகர் டெல்லி மற்றும் புனேவில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.2500 கோடி மதிப்பிலான, சுமார் 1,100 கிலோகிராம் எடை கொண்ட 'மியாவ் மியாவ்' என்று அழைக்கப்படும் Mephedrone (MD) என்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், குஜராத்தில் கடற்பரப்பில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் 3,300 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 3,089 கிலோ கஞ்சா, 158 கிலோ மெத்தாம்பெட்டமைன் மற்றும் 25 கிலோ மார்பின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் இருந்துள்ளன. அந்த பைகளில் பாகிஸ்தான் தயாரிப்பு என எழுதப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு ராஜினாமா!
கண்காணிப்பு விமானம் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்தபோது சந்தேகத்திற்கிடமான படகை இந்திய கடற்படை கப்பல் நிறுத்தியுள்ளது. விசாரணையில், படகில் அதிக அளவு போதைப்பொருள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர், அதைத் தொடர்ந்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வந்த படகு, போதைப்பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து மேலதிக விசாரணைக்காக கைது செய்யப்பட்டவர்கள் குஜராத்தின் போர்பந்தருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். “நமது தேசத்தை போதைப்பொருளற்ற நாடாக மாற்றுவதில் நமது அரசாங்கத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கு இந்த வரலாற்று வெற்றி ஒரு சான்றாகும். இந்தச் சந்தர்ப்பத்தில், என்சிபி, கடற்படை மற்றும் குஜராத் காவல்துறையை நான் வாழ்த்துகிறேன்.” என அமித் ஷா தெரிவித்துள்ளார்.