இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
காங்கிரஸ் ஆளும் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு நடந்த தேர்தலின்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பாஜகவுக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது. இதனால், பாஜக வேட்பாளர் வெற்றியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்தார்.
இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவையில் மொத்தம் 68 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 40 உறுப்பினர்களும், பாஜகவிடம் 25 உறுப்பினர்களும் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 6 உறுப்பினர்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்தது மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வழிவகுத்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. இந்தநிலையில், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க காங்கிரஸ் மேலிடம் முயற்சித்து வருகிறது. இதனிடையே இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மீதான அதிருப்தி காரணமாக அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் முன்னாள் முதல்வர் விர்பத்ர சிங்கின் மகனாவார்.
இமாச்சலப் பிரதேசத்தில் ஆறு முறை முதல்வராக இருந்தவரும், காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்தவருமான தனது தந்தை வீர்பத்ர சிங்கிற்கு சிலை வைக்க மால் சாலையில் ஒரு சிறிய இடத்தைக் கண்டடைய இமாச்சல் அரசு தவறி விட்டதாக விக்ரமாதித்ய சிங் குற்றம் சாட்டியுள்ளார். அவருக்கு சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேரின் ஆதரவு பாஜகவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களினால் அம்மாநிலத்தில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஹிமாச்சலப்பிரதேசம் காங்கிரஸ் ஆட்சியில் உச்சக்கட்ட குழப்பம்; 15 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்!!
இந்த நிலையில், இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஆனால், சுக்விந்தர் சுகு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம், எந்த நேரமும் ராஜினாமா செய்ய தயாராக இருக்குமாறும், காங்கிரஸ் கட்சித் தலைமையின் உத்தரவை ஏற்று சுக்விந்தர் சிங் சுகு பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய முதல்வர் இன்று மாலைக்குள் தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.