உத்தரபிரதேசத்தில் பர்தாவுடன் முஸ்லீம் பெண்கள் கேட்வாக் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் கல்லூரியில் நடந்த பேஷன் ஷோவின் போது சில பெண்கள் பர்தா அணிந்து கேட்வாக் நடத்தியதால், ஜாமிஆ உலமா முஸ்லிம் சமூகத்தினர் கோபமடைந்துள்ளனர். ஒரு கல்வி நிறுவனத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதா? என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், "பர்தா" என்பது ஃபேஷன் ஷோவில் காட்டப்படும் பொருள் அல்ல. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஸ்பிளாஸ் 2023 என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட பேஷன் ஷோவில் பாலிவுட் நடிகர்கள் மந்தாகினி மற்றும் ராதிகா கெளதம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முஸ்லிம் பெண்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணரும் களம் இது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பேஷன் ஷோக்களில் அதிநவீன ஆடைகளில் கலந்து கொள்வது சாத்தியமில்லை என்றும், அதனால் பர்தா அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றதாக அப்பெண்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், புர்காவை ஆடையாக மட்டும் பார்க்கக் கூடாது என்றும் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
வேறு சிலர், பேஷன் ஷோக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், மத உணர்வுகளைத் தூண்டக்கூடாது என்றும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.