அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, சரியாக 12.30 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. குழந்தை ராமரின் சிலை சரியாக 12.30 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிராண பிரதிஷ்டா எனும் சடங்கு சிலைக்கு உயிரூட்டுவதாகும். கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து வயதுடைய குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஐந்து வயது பாலகனாக அயோத்தி கோயிலில் ராமர் அருள் பாலிக்கிறார்.
இந்த நிலையில், அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, சரியாக 12.30 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ‘முகுரத் பிரசவம்’ எனும் சுபநிகழ்ச்சியுடன் ஒத்துப்போகும் மங்களகரமான நேரத்தில் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டு, அக்குழந்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் நாளில், அதேநேரத்தில் ‘முகுரத் பிரசவம்’ என்ற கோரிக்கை 42 வயதான நன்கு படித்து, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் தானேவை சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவர்களிடம் வைத்துள்ளார். அக்கோரிக்கையை மருத்துவர்கள் ஒப்புக் கொண்டதை அடுத்து, மகாராஷ்டிராவின் தானே நகரில் உள்ள மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு இன்று நண்பகல் 12.30 மணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை ராமர் இனி கூடாரத்தில் தங்க மாட்டார் - பிரதமர் மோடி பெருமிதம்!
ஜனவரி 23 ஆம் தேதி நடக்கவிருந்த தனது பிரசவத்தை, சுபநிகழ்ச்சியுடன் ஒத்துப்போகும் வகையில், ஒரு நாள் முன்னரே செய்யுமாறு அப்பெண் கேட்டுக் கொண்டதாக, அப்பெண்ணுக்கு திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்த மாலே மருத்துவமனையின் மருத்துவர் சந்திரகாந்த் பாரே தெரிவித்துள்ளார். மேலும், அப்பெண் IVF செயல்முறைக்கு செல்லவில்லை எனவும், இயற்கையாகவே கருத்தரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர், மதியம் 12.30 மணியளவில் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி முகுரத் பிரசவத்தை பெற்றோர்கள் பலரும் நாடியுள்ளனர். இந்த நாளில் பிறக்கும் குழந்தைகள் 'மர்யதா புருஷோத்தம்' ராமரை வரையறுக்கும் குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.