
விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய அலுவலகத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஜே.சி.திவாகர் ரெட்டி, ரகளையில் ஈடுபட்டதால் இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட 4 விமான நிறுவனங்கள் அவருக்கு தடை விதித்துள்ளன.
விசாகபட்டினத்தில் தெலுங்கு தேச எம்.பி. திவாகர் ரெட்டி செல்லவிருந்த விமானம், அவரது வருகை தாமதமானதால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
விமானப் போக்குவரத்து விதிகளின்படி, விமானம் புறப்படுவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாகவே பயணிகள் செல்லும் வழி மூடப்படும். அதன்பின்னர் யாரும் அந்தவழியாக அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இந்நிலையில், விமானம் புறப்பட்டுச் சென்ற அரைமணிநேரம் கழித்தே திவாகர் ரெட்டி விமான நிலையத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அரை மணிநேரம் தாமதமாக வந்த ரெட்டிக்கு விமான நிலைய ஊழியர்கள் நுழைவுச் சீட்டு வழங்க மறுத்துவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த திவாகர் ரெட்டி, விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ விமான நிறுவன அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள பொருட்களை தூக்கி வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திவாகர் ரெட்டிக்கு இண்டிகோ விமான நிறுவனம் தடை விதித்துள்ளது. இண்டிகோ விமானத்தை தொடர்ந்து ஏர் இந்தியா விமானமும் அவருக்கு தடை விதித்துள்ளது.
இது தவிர மேலும் 2 தனியார் விமான நிறுவனங்களும் திவாகர் ரெட்டிக்கு தடை விதித்துள்ளன. இதற்கு முன் விஜயவாடாவில் உள்ள கன்னாவரம் விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா விமான நிலைய அலுவலகத்தின் மீது திவாகர் ரெட்டி தாக்குதல் நடத்தியதால் அவருக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்ததது. அவர் மன்னிப்புக் கேட்டதையடுத்து தடை நீக்கப்பட்டது, தற்போது திவாகர் ரெட்டிக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சிவசேனா எம்பி ஒருவர் இதே போல் விமானத்தில் ஊழியர்களுடன் தகராறு செய்தார் என்ற காரணத்தால் தடை விதிக்கப்பட்டார், பின்னர் அந்த தடை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.