934 பேர் பலி..! இந்தியாவில் 30 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு..!

Published : Apr 28, 2020, 10:41 AM IST
934 பேர் பலி..! இந்தியாவில் 30 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு..!

சுருக்கம்

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 29,435 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 934 பேர் பலியாகி இருக்கின்றனர்.


உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கொரோனா வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் அமலில் இருந்த 21 நாட்கள் ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார். அதன்படி வருகிற மே3ம் தேதி வரை இரண்டாம் கட்ட தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்த போதும் தினமும் 1300 நபர்களுக்கு மிகாமல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும் பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 29,435 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 934 பேர் பலியாகி இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டு 62 பேர் பலியாகி உள்ளனர். தற்போது வரை 21,632 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 6,868 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஸ்டிரா இருக்கிறது. அங்கு கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை அங்கு 8,590 பேர் பாதிக்கப்பட்டு 369 பேர் மரணமடைந்துள்ளனர். அதற்கடுத்தபடியாக குஜராத்தில் 3,548 பேரும், டெல்லியில் 3,108 பேரும், ராஜஸ்தானில் 2,262பேரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,937 ஆக உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்துமாறு பிரதமர் மோடி மாநில அரசுகளிடம் கூறியிருக்கிறார். இதனிடையே பாதிப்புகள் கட்டுக்கள் வராத நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சார்பாகவும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்
மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!