சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1! செப். முதல் வாரத்தில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்!

By SG BalanFirst Published Aug 27, 2023, 4:38 PM IST
Highlights

ஆதித்யா-எல்1 செப்டம்பர் முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 2ஆம் தேதி ஆதித்யா-எல்1 விண்கலத்தை விண்ணில் ஏவ இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது.

சந்திரயான்-3 ரோவர் சந்திரனில் சோதனைகளை மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் தங்கள் அடுத்த இலக்கான சூரியனை நோக்கி தங்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சூரிய ஆராய்ச்சிக்கான இந்தியாவின் முதல் விண்கலமாக அமையவுள்ள ஆதித்யா-எல்1, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுவதற்குத் தயாராகி வருகிறது.

Latest Videos

ஆதித்யா-எல்1 என்ன செய்யும்?

ஆதித்யா-எல்1 விண்கலம் தொலைதூர கண்காணிப்பு மூலம் சூரியனின் கரோனா பகுதியை ஆய்வு செய்யவுள்ளது. சூரிய வளிமண்டலத்தையும் ஆய்வு செய்யும் வகையில் ஆதித்யா எல்1 வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் சூரியக் காற்றை விரிவாக ஆய்வு செய்யும். பூமியில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் சூரியனின் இந்த அனல்காற்று "அரோராஸ்" (auroras) என்று அழைக்கப்படுகிறது.

நீண்ட காலத்திற்கு, பூமியின் காலநிலை முறைகளில் சூரியனின் தாக்கத்தை நன்கு புரிந்துகொள்ள ஆதித்யா எல்1 ஆய்வுத் தரவுகள் உதவும் என்று நம்பப்படுகிறது.

பாதையில் குறுக்கிட்ட பள்ளத்தைத் தவிர்த்துச் சென்ற சந்தியான்-3 பிரக்யான் ரோவர்! இஸ்ரோ வெளியிட்ட புது வீடியோ!

ஆதித்யா-எல்1 மிஷன் எப்போது தொடங்கப்படும்?

ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் தயாராக உள்ளது. ஏற்கெனவே ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலத்தை ஏவுவதற்கான இறுதி தேதி இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்துள்ளார்.

ஆதித்யா-எல்1 செப்டம்பர் முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரோ செப்டம்பர் 2ஆம் தேதி ஆதித்யா-எல்1 விண்கலத்தை விண்ணில் ஏவ இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதித்யா-எல்1 எவ்வளவு தூரம் பயணிக்கும்?

ஆதித்யா-எல்1 இந்தியாவின் கனரக ஏவுகணை வாகனமான பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1.5 மில்லியன் கிலோமீட்டர்கள் பயணிக்கும்.

"விண்கலம் ஏவப்பட்ட பிறகும் பூமியிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட புள்ளியை (L1) அடைய 125 நாட்கள் ஆகும். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்" என்கிறார் இஸ்ரோ தலைவர் சோமநாத்.

விண்கலம் விண்வெளியில் ஒரு வகையான பார்க்கிங் பகுதியை அடையும். அங்கு ஈர்ப்பு விசைகள் சமநிலைப்படுத்துவதால், விண்கலத்திற்கான எரிபொருள் நுகர்வு குறையும். இத்தகையபகுதிகள் இத்தாலிய-பிரெஞ்சு கணிதவியலாளர் ஜோசப்-லூயிஸ் லக்ரேஞ்ச் நினைவாக லக்ரேஞ்ச் புள்ளிகள் (Lagrange Points) என்று அழைக்கப்படுகின்றன.

ஆதித்யா-எல்1 திட்டத்துக்கு எவ்வளவு செலவாகும்?

இஸ்ரோவின் விண்வெளி திட்டங்கள் குறைந்த செலவில் செயல்படுத்தப்படுவது உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் முதல் முதலில் தரையிறங்கி சாதனை படைத்திருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் செலவு ரூ.615 கோடி மட்டுமே. இது இன்டர்ஸ்டெலர் ஹாலிவுட் படத்தின் பட்ஜெட்டைவிடக் குறைவு என்று ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் ஆச்சரியத்துடன் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலம் சந்திரயான்-3 விண்கலத்தின் செலவில் பாதி அளவுக்கு மட்டுமே செலவிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. சூரியனின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் இந்தப் பணிக்காக 2019ஆம் ஆண்டில் ரூ.378 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்னும் ஆதித்யா எல்1 விண்கலத்துக்கான செலவுகள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவலை இஸ்ரோ வெளியிடவில்லை.

மேற்கு வங்கத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் உடல் சிதறி பலி; பலர் படுகாயம்

click me!