
செல்லாத நோட்டு விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் வந்து விவாதிக்க மோடி ஏன் அஞ்சுகிறார் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த அறிவிப்பை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது, ராகுல்காந்தி கூறியதாவது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்தது உலகிலேயே மிகப்பெரிய முன்னேற்பாடற்ற நிதி பரிசோதனை ஆகும். இது குறித்து அவர் யாரையும் கேட்கவில்லை. இது நிதி மந்திரியின் முடிவு அல்ல மாறாக பிரதமரின் முடிவு. இது குறித்து நிதி மந்திரிக்கு தெரியாது. தலைமை பொருளாதார ஆலோசகருக்கு தெரியாது.
இந்த அறிவிப்புக்கு முன், சில வங்கி கணக்குகளில் வைப்புத்தொகை அதிகளவுக்கு உயர்ந்துள்ளது. மேற்கு வங்காள பாஜக கிளை மற்றும் பிற மாநில கிளைகளுக்கு இந்த அறிவிப்பு குறித்து தெரிந்துள்ளது. இவ்வாறு பாஜகவினருக்கும், பாஜகவின் தொழிலதிபர் நண்பர்களுக்கும் இது தெரிந்துள்ளது.
எனவே இந்த முடிவுக்கு பின்னால் ஊழல் நடந்திருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னால் பாஜக தலைவர்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்களுக்கு பிரதமர் தகவல் கூறியிருப்பதாக நாங்கள் கருதுகிறோம். எனவே இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
பிரதமர் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்? என 200 எம்.பி.க்கள் கேட்கிறார்கள். ஆனால் இதற்கு பதில் கூற வேண்டிய பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வருவதில்லை. நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு அவர் ஏன் அஞ்சுகிறார்?
இந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் நிச்சயம் நாடாளுமன்றத்துக்கு வரவேண்டும். இந்த பிரச்சனை தொடர்பான ஒட்டுமொத்த விவாதத்திலும், அவர் எதிர்க்கட்சி தலைவர்களின் கோரிக்கைகளை கேட்க வேண்டும். பொதுக்கூட்டங்களிலும், இசை கச்சேரிகளிலும் பங்கேற்க நேரம் இருக்கும் அவருக்கு, நாடாளுமன்றத்துக்கு வர நேரம் இல்லை.
காங்கிரஸ் மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராகவே போராடி வருகின்றன. ஆனால் முன்கூட்டியே திட்டமிடாத இந்த அறிவிப்பு மூலம் சிறப்பாக இருந்த பொருளாதாரத்தை நீங்கள் பாழாக்கி விட்டீர்கள். நாட்டை பொருளாதார குழப்பத்தில் தள்ளிவிட்டீர்கள்.
இந்த அறிவிப்பால் மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், தொழிலாளர்களின் நிலையோ மோசமாகி உள்ளது.
வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் கோட்-சூட் போட்டவர்களோ, பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களோ வரிசையில் நிற்கிறார்களா? அவர்களுக்கு பணம் தேவையில்லையா? சாதாரண மக்கள் தான் வங்கிகளில் வரிசையில் நிற்கிறார்கள். அதையே இங்கு நாங்கள் செய்கிறோம்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில், உயிரிழந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆனால் வங்கிகளில் வரிசையில் நின்று உயிரிழந்தவர்களின் பெயர்கள் அதில் இடம் பெறவில்லை. இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த நேரமில்லாதது அவமானத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.