கேரள பிரநிதிகளை சந்திக்காமல் மோடி அலட்சியம் - உம்மன்சாண்டி கண்டனம்

First Published Nov 25, 2016, 6:01 PM IST
Highlights


ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பால் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து பேச வந்த  அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் மோடி மறுத்தது ஆபத்தான முன் உதாரணம் என்று முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி விமர்சனம் செய்துள்ளார்.

ரூபாய் தடை அறிவிப்பு

500, 1000 ரூபாய் நோட்டுக்கு தடை விதித்தைத் தொடர்ந்து, கூட்டுறவு வங்கிகளும் பணப்பரிமாற்றம் செய்யவும், பழைய நோட்டுகளை வாங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இதனால், நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் சேவை முடங்கியது. கேரள மாநிலத்தில் கூட்டுறவு வங்கிகளை நம்பியிருக்கும் மக்கள் அன்றாடத் தேவைகளுக்கு பணம் எடுக்க முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

மறுப்பு

இதையடுத்து,மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி பிரதமர் மோடியிடம் இது குறித்து பேச சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை சந்திக்க நேரம் ஒதுக்க பிரதமர் மோடி மறுத்துவிட்டார்.

இது குறித்து முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி கொச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-

ஆபத்து

சுதந்திர இந்தியாவில் இது போல் இதற்கு முன், மாநிலத்தின் சார்பில் வந்த பிரதிநிதிகளை சந்திக்காமல் எந்த பிரதமரும் இருந்தது கிடையாது. பிரதமர் மோடியும் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர்தான். அவர் இந்த முடிவை புரிந்திருப்பார் என நம்புகிறேன். அவர் சந்திக்காமல் மறுத்தது ஆபத்தான முன் உதாரணம் ஆகும்.

அவமதிப்பு

 அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை பிரதமர் மோடி சந்திக்காமல் மறுத்தது, கேரள மாநிலத்தையே அவமதிக்கும் செயல். அதுமட்டுமல்லாமல், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள கூட்டாச்சி தத்துவத்தையும் அவமதிக்கும் செயலாகும்.

கண்டுகொள்ளவில்லை

ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் கடந்த 16 நாட்களாக எதிர்கட்சிகள் ஆக்கப்பூர்வ முடிவை அரசு எடுக்க கோரி வருகின்றன. நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், எதையும் செய்ய மோடி மறுத்து வருகிறார். இது நாடாளுமன்றத்தின் இறையான்மையையும் வேர் அறுக்கும் செயலாகும்.  ரூபாய் நோட்டு தடையால் மக்கள் அனுபவிக்கும் வேதனையையும், துன்பத்தையும் மோடி கண்டுகொள்ளாமல் மோடி இருக்கிறார்.

கோரிக்கை

கூட்டுறவு வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்ய தடையால் அந்த துறையே முடங்கி இருக்கிறது. மாநிலத்தில் ரூ.1.30 லட்சம் கோடி டெபாசிட் கூட்டுறவு வங்கிகளில் இருப்பதால் கிராமப் பொருளாதாரத்துக்கு முக்கியமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஆதலால்,  கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!