
நாட்டின் வளர்ச்சி எனும் எந்திரத்துக்கு, நகரங்களுக்கு இடையே விமானத் தொடர்பை அதிகப்படுத்துவது அவசியம். உதான் திட்டம் மூலம் ஹவாய்(ரப்பர்)செருப்பு அணிந்த சமானியர்களும், விமானத்தில் ஹவாய் நகர் வரை பறக்கலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாட்டில் உள்ள சமான்ய மக்கள் அனைவருக்கும் விமானப்பயணம் சாத்தியமாகும் வகையில், முக்கியமான மண்டலங்களுக்கு இடையே குறைந்த விலை கட்டணத்தில் விமானப்பயணம் மேற்கொள்ளும் ‘உதான்’ திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. விமானத்தில் ஒரு மணிநேர பயணத்துக்கும், ஹெலிகாப்டரில் 30 நிமிட பயணத்துக்கு ரூ. 2500 கட்டணமும் வசூலிக்கப்படும்.
மேலும், இந்த திட்டத்தில் நாட்டில் பயன்பாட்டில் இல்லாத 45 விமானநிலையங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் பகுதியாக முதலில் சிம்லா-டெல்லி, கடப்பா-ஐதராபாத், நான்டேட்-ஐதராபாத் இடையிலான சேவை நேற்று தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக தனி ஹெலிகாப்டர் மூலம் சண்டிகர் நகரில் இருந்து சிம்லா நகருக்கு நேற்று பிரதமர் மோடி வந்தார். அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் விமானம், சிம்லா முதல் டெல்லி வரையிலான விமானச் சேவையை நேற்றுத் தொடங்கியது. 42 பேர் அமரக்கூடிய இந்த விமானத்தின் சேவையை பிரமதர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், கானொலிக் காட்சி மூலம் கடப்பா - ஐதராபாத், நான்டேட்-ஐதராபாத் இடையிலான சேவையையும் பிரதமர மோடி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது-
ஒரு காலத்தில் விமானப் பயணம் என்பது ராஜாக்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் என்ற நிலை இருந்தது. அதனால் தான் ஏர் இந்தியா விமானத்தில் கூட மஹாராஜாவின் சின்னம் வழங்கப்பட்டது. ஆனால், உதான் திட்டம் மூலம், ஹாவாய்(ரப்பர்) செருப்பு அணிந்த சாமானிய மக்களும், ஹவாய் நகர் வரை விமானத்தில் செல்ல முடியும்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் விமானப்போக்குவரத்து அமைச்சராக இருந்த ராஜீவ் பிரதாப் ரூடி இருந்தபோது, ஏர் இந்தியாவின் சின்னமாக, கார்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணனின் சாமான்ய மனிதர் உருவத்தை சின்னமாக ஆக்கலாம் என்று அறுவுறுத்தப்பட்டது.
நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே எளிதாக சென்று வரும் சூழல் இருந்தால், இளைஞர்கள் அதிகமான வாய்ப்புகளைப் பெற்று, நாட்டின் தலைஎழுத்தையும், தோற்றத்தையும் மாற்றுவார்கள். கடந்த 70 ஆண்டுகளாக எந்தவிதமான உள்நாட்டு விமானப் போக்குவரத்து கொள்கையில் இல்லை. 2-ம் உலக்கப்போருக்கு பின், பல இடங்களில் விமான ஓடுதளங்கள் இருக்கிறதே தவிர விமானநிலையங்கள் இல்லை.
ஆனால், உதான் திட்டத்தின் கீழ், விமானக் கட்டணம் கட்டுக்குள் இருக்கும், டாக்சியில் செல்லும் கட்டணத்தைக் காட்டிலும் குறைவாக இருக்கும், பலமணி நேர பயண நேரமும் மிச்சமாகும்.
டெல்லி முதல் சிம்லா வரை டாக்சியில் செல்ல கி.மீ. ரூ.10 கொடுக்க வேண்டும். ஆனால், விமானத்தில் ரூ.6முதல்7 கொடுத்தால் போதுமானது. பலமணிநேரமும் மிச்சமாகும்.
நாதேத் சாஹேப், அமிர்தசர் சாகேப், பட்னா சாகேப் ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் விமானப்பயணத்தை கொண்டு வந்தால், உலக அளவில் இருந்து அதிகமான சீக்கியர்கள் பயணிப்பார்கள்.
நாட்டில் உள்ள 2-ம் தர, 3-ம் தர நகரங்களை விமானத்தில் மூலம் இணைப்பதன் மூலம், வளர்ச்ச எனும் எந்திரம் ஊட்டம் பெறும். வடகிழக்கு மண்டலங்களையும் இணைக்க வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்கு இந்த திட்டம் பங்களிக்கும். பல்வேறு கலாச்சாரம், பாரம்பரியத்தை கொண்ட மக்கள் இதில் ப யணிப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.