இனி அனைவருக்கும் குறைந்த விலையில் ‘ஸ்மார்ட்போன்’ ; ‘சர்காரி’ பே-டிம் வசதி - மோடியின் அடுத்த அதிரடி

First Published Nov 25, 2016, 2:29 PM IST
Highlights


நாட்டில் மின்னனு பணப் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பே-டிம் போன்று, மத்திய அரசு சார்பில் கட்டணம் இல்லா ‘சர்காரி’ எனும் இ-வாலட்டை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கிராமங்களில் உள்ள ஏழைமக்களுக்கு மானிய விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் இருக்கும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் அனைத்து தேவைகளுக்கும் ரொக்கப் பணமாக பரிமாற்றம் செய்வதைக் குறைத்து,  வங்கிப் பரிமாற்றமாகவும், மின்னனு பரிமாற்றமாகவும் கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான முயற்சியாக இது இருக்கும்.

இதற்காக தற்போது தனியாரின் பே-டிம்(paytm) இ-வாலட் போன்று, அரசு சார்பில் மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு இ- வாலட்டை கொண்டு வர மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. பே-டிம் வாலட்டில் மக்கள் பயன்படுத்தும் போது சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், மத்திய அரசு கொண்டு வரும் ‘சர்காரி’ இ-வாலட்டில் சேவைக் கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.

அதுமட்டுமல்லாமல் தற்போது, உள்ள தனியார் நிறுவனங்களின் இ-வாலட்டில் இல்லாத பல்வேறு அம்சங்களையும், வசதிகளையும் இந்த ‘சர்காரி’ இவாலட் ஒருங்கே கொண்டு இருக்கும் என்று மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத நிதித்துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மத்திய நிதியமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் இணைந்து, ‘சர்காரி’ இ-வாலட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த திட்டத்தை நிதி அயோக் அமைப்பு கண்காணித்து தயார் செய்து உருவாக்கி வருகிறது.

மேலும், ‘சர்காரி’ இ-வாலட்டை அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில், குறிப்பாக கிராமத்தில் உள்ள ஏழைமக்கள் பயன்படுத்தும் வகையில், மானிய விலையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்கான அறிவிப்பு வரும் 2017-18 பொது பட்ஜெட்டில் மத்தியஅரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த ஸ்மார்ட்போன்களில் ‘சர்காரி’ இ-வாலட் ‘ப்ரீஇன்ஸ்டால்ட்’(preinstalled) மென்பொருளாக வந்துவிடும். அதன்மூலம் மக்கள் ‘சர்காரி’ அப்ளிகேஷணை பதிவிறக்கம் செய்யத்தேவையில்லை. மேலும், இந்த சர்காரி ஆப்ஸ் மூலம், தங்கள் கணக்கில் இருந்து பணத்தை யாருக்கு வேண்டுமானாலும், கட்டணமின்றி  பரிமாற்றம் செய்யலாம். பொருட்களையும், சேவைகளையும் பெறலாம்.

குறிப்பாக பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்ப பணம் செலுத்தலாம், மாநில, மத்திய அரசு பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம் செலுத்தலாம், ரேஷன் கடைகளில் பணம் செலுத்தலாம், பால் நிலையங்களில் பணம் செலுத்தலாம், ரெயில்வே, பஸ் நிலையம், விமான நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பணம் செலுத்தலாம். இது போன்ற தனியார் சேவைகளையும் பெற இதை பயன்படுத்தலாம். இதற்கு எந்த விதமான கட்டணமும் அரசு சார்பில் வசூலிக்கப்படாது. இந்த ஸ்மார்ட்போன் வாங்குவதற்கான மானியத் தொகை பயணாளிகளின் ஆதார் எண், வங்கிக்கணக்கில் அரசுடெபாசிட் செய்யும்'' என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி , கடந்த 8ந் தேதி ரூ.1000, ரூ500 நோட்டை தடை செய்ததில் இருந்து, எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்களையும், தொடர் போராட்டங்களையும் சந்தித்து வந்தபோதிலும் கூட டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. 

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இது தொடர்பாக நேற்று, அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் பணியை போர்கால வேகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!