500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது – ‘பிச்சைக்காரன்’ படத்தை பார்த்தாரா மோடி…!!!

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 12:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது – ‘பிச்சைக்காரன்’ படத்தை பார்த்தாரா மோடி…!!!

சுருக்கம்

கருப்பு பணத்தை வெளியே கொண்டு வரும் நோக்கில் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதை கேட்ட பொதுமக்கள், தமிழில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படத்தை மோடி பார்த்து இருப்பாரோ என கேள்வி எழுப்புகின்றனர்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதையொட்டி வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க அந்தந்த நாடுகளின் துணையுடன் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அதேபோல், உள்நாட்டில் கணக்கில் காட்டாமல் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள், அந்த பணத்துக்கு கணக்கு காண்பித்து, வரி மற்றும் அபராதம் செலுத்தும் திட்டத்தையும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன்படி, ரூ.65 ஆயிரம் கோடி கருப்பு பணம் வெளியே கொண்டு வரப்பட்டது.

இதைதொடர்ந்து மோடி, கருப்பு பணத்துக்கு எதிராக பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நேற்று அவர் வெளியிட்டார். நேற்று இரவு தொலைக்காட்சியில் பேசியபோது, பிரதமர் மோடி கூறியதாவது:-

சில முக்கிய முடிவுகளையும், சில தீவிர பிரச்சனைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கருப்பு பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் புதிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது.

அதன்படி, 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் இன்று (நேற்று) நள்ளிரவில் இருந்து செல்லாது. இன்று முதல், இந்த நோட்டுகள் வெறும் காகிதங்களாகவே கருதப்படும். ஆனாலும், 11ம் தேதி நள்ளிரவு வரை, சர்வதேச விமான நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்குள்ள மருந்தகங்கள், பொதுத்துறை பெட்ரோல் பங்க்குகள், கூட்டுறவு சங்கங்கள், மாநில அரசுகள் நடத்தும் பால் விற்பனை நிலையங்கள், உடல் எரியூட்டும் இடங்கள், பஸ், ரயில், விமான டிக்கெட் முன்பதிவு கவுன்ட்டர்களிலும் 11ம் தேதி நள்ளிரவு வரை ஏற்று கொள்ளப்படும்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர் கள், நாளை முதல் டிசம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகள், தலைமை தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்களில் அவற்றை டெபாசிட் செய்யலாம். அதற்கு உச்சவரம்பு கிடையாது.

100 ரூபாய், 50 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வழக்கம்போல் பயன்படுத்தலாம். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, காசோலை, டிமாண்ட் டிராப்ட், நெட் பேங்கிங், மின்னணு பண பரிவர்த்தனை போன்ற வழிகளில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டுப் பாடும் கிடையாது.

புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு கொண்டுவரப்படும். ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிரான இந்த போராட்டத்தில் அரசாங்கத்துடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கூறினார். 

கடந்த ஆண்டு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் வெளியானது. அந்த படத்தின் ஒரு காட்சியில், கோயில் வெளியே ஒரு பிச்சைக்காரர், எப்எம் ரேடியோவில் நேயர்கள் கருத்து தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு போன் செய்து பேசுவார்.

அதில், கருப்பு பணத்தை எப்படி கட்டுப்படுத்துவது என கேள்வி எழுப்பபடும். அதற்கு, ‘‘முதல்ல 500 ரூபா… 1000 ரூபா… நோட்டுங்கள முடக்கனும். அப்பத்தான் கருப்பு பணத்தை கட்டுப்படுத்த முடியும். 1000 ரூபா நோட்டு இருக்குறதால, ஒரு லட்சத்தை மறைச்சி வைக்கிறாங்க. அதே 100 ரூபா நோட்டா இருந்தா எப்படி மறைப்பாங்க… வெட்ட வெளிச்சத்துக்கு வரும்ல” என கூறுவார்.

அதே பாணியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உள்ள மத்திய அரசு, தற்போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்துள்ளது. இதனால், மோடி தமிழில் வெளியான பிச்சைக்காரன் படத்தை பார்த்திருப்பாரோ என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: லெவல் 5 ஊழியர்களுக்கு மாதம் ரூ.15,800 வரை HRA உயருமா? முழு விவரம்.!
Rs 12000 Scholarship: 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.12,000; இந்த அரசு ஸ்காலர்ஷிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?