
ஜப்பான் நாட்டுக்கு 3 நாள் அரசு முறை சுற்று பயணமாக சென்ற மோடியை, அந்நாட்டு மன்னர் சந்தித்தார்.
மூன்று நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபேயை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இந்தியா - ஜப்பான் இடையே உறவை மேம்படுத்தும் வகையில் அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.
இன்று மாலை இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான வருடாந்திர மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
இதற்கிடையில், பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத அம்சமாக ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவை இன்று பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். ஜப்பான் மன்னர் வெளிநாட்டு தலைவர்களை அவ்வளவு எளிதாக சந்திப்பதில்லை என்பதால் அவரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசிய நிகழ்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பழமை வாய்ந்த – பல்லாண்டு கால தொடர்புகளை பற்றியும், இந்தியா - ஜப்பான் மற்றும் ஆசியநாடுகளின் எதிர்காலம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக பிரதமருடன் டோக்கியோ சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பளர் விகாஸ் ஸ்வருப் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 ஆண்டுகளில் நடத்திய சுற்று பயணத்தில், இரண்டாவது முறையாக ஜப்பானுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.