
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந் தேதி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் வங்கிகளில் அந்த பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்டு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அதிரடி அறிவிப்பால் நாடு முழுவதும் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பணத்தை மாற்ற முடியுமா என்ற ஏக்கத்தில் தூக்கத்தை தொலைத்துள்ளனர்.
அந்த கருப்பு பணத்தை வங்கிகளில் மாற்ற அப்பாவிகள் ஏழை மக்களுக்கு கமிஷனாக சிறு தொகையை கொடுத்தும் சிலர் மாற்றி வருகிறார்கள்.
அடுத்த கட்டமாக டிசம்பர் 31-ந் தேதிக்கு பிறகு மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். இதனால் எந்த மாதிரி அதிரடி அறிவிப்புகள் வருமோ ? என்ற அதிர்ச்சியில் கருப்பு பண முதலைகள் பலரும் தவியாய் தவித்து வருகிறார்கள்.
இதில் குறிப்பாக வங்கியின் லாக்கர்களில் குறைந்த பட்சம் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை டெப்பாசிட் மற்றும் மாத வாடகையாக 1000 முதல் 2 ஆயிரம் வரை செலுத்தி ஏராளமானோர் தங்க நகைகள், வைரம் மற்றும் பிளாட்டினம் என விலை உயர்ந்த பொருட்களை வைத்து பாதுகாத்து வருகிறார்கள்.
பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்புகளில் அடுத்த கட்டமாக லாக்கரில் வைக்கப்பட்டுள்ள நகைகளுக்கும் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டு அதிகமாக உள்ள நகைகள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இதனால் உச்சவரம்புக்கு மேல் உள்ள நகைகள் தங்களுக்கு கிடைக்காமல் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடுமோ ? என்று சிலர் அஞ்சி நடுங்குகிறார்கள்.
இதனால் உஷாரான வாடிக்கையாளர்களில் சிலர் லாக்கரில் உள்ள நகைகளையும் அவசர அவசரமாக வெளியில் எடுத்து வருகிறார்கள். பின்னர் வீட்டிற்கு கொண்டு செல்லும் அவர்கள் பல மணி நேரம் தூங்காமல் யோசித்து உறவினர் வீடு உள்பட பல இடங்களில் பதுக்கி வைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
இதே போல வீட்டில் ஏற்கனவே கிலோ கணக்கில் பதுக்கி வைத்துள்ள நகைகளுக்கும் சிக்கல் ஏற்பட்டு விடுமோ? என்று கருதும் சிலர் அதையும் உறவினர் மற்றும் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் வீடுகளுக்கும் கொண்டு சென்று தற்போதே மறைத்து வைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
மொத்தத்தில் பிரதமரின் அதிரடி அறிவிப்புகளால் பணம்-நகைகளை அளவுக்கு அதிகமாக பதுக்கி வைத்துள்ளவர்கள் நிம்மதியை தொலைத்து புலம்பி செல்வதும் ஆங்காங்கு சத்தமில்லாமல் அரங்கேறுவதை பார்க்க முடிகிறது.