One Nation One Election: ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு; விரைவில் வருகிறது சட்டம்!!

By Dhanalakshmi G  |  First Published Sep 1, 2023, 10:14 AM IST

'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை செயல்படுத்துவதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை பிரதமர் நரேந்திர மோடி அரசு வெள்ளிக்கிழமை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  
 


சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை மத்திய அரசு வரும் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கூட்டியுள்ளது. இந்தக் கூட்டத்தில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுடன், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, பொது சிவில் சட்ட மசோதாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மோடி தலைமையிலான அரசு நியமித்துள்ளது. இந்தக் குழு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக சாதக பாதகங்களை ஆய்வு செய்து, விரைவில் சட்ட விதிகளில் மாற்றங்களை கொண்டு வரும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் இந்தக் குழு எதிர்க்கட்சிகளையும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், எந்தவித முரண்பாடுகளும் இல்லாமல், சட்டத்தை இயற்றுவதற்கான சூழலை இந்தக் குழு ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

நடைபெற இருக்கும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தின் நிகழ்வுகள் என்ன என்று அறிவிப்பதற்கு முன்பாகவே, மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டு சட்டம் இயற்றுவதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. 

10 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனை.. டிஜிட்டல் இந்தியா படைத்த புது சாதனை.. இவ்ளோ பெரிய சாதனையா.!!

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற கருத்து, கடந்த காலங்களில் பலமுறை விவாதிக்கப்பட்டாலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. பாஜக இதை ஆதரித்து வருகிறது. செலவு கட்டுப்படும், சேமிப்பு அதிகரிக்கும் மற்றும் செயல்திறனை அதிகரிக்க வழிவகுக்கும் என்று பாஜக கூறி வருகிறது. மத்திய அரசின் மதிப்பீட்டின்படி, இந்த மசோதாவை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசு கருவூலத்திற்கு ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி மிச்சமாகும் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செயல்முறைகளை சீரமைக்கலாம் என்று பாஜக கருத்து தெரிவித்து வருகிறது.

ஆயினும்,  'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை நிறைவேற்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டும். லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகள் வெவ்வேறு தேர்தல் சுழற்சிமுறைகளை  பின்பற்றுவதால், பரஸ்பரம் ஒப்புதல் ஏற்படுத்த வேண்டும். இது சிக்கலான பணியாக இருப்பதால், சவாலாக பார்க்கப்படுகிறது.

‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’: இந்தியாவை பாகிஸ்தான் ஆக்குவதற்கான முயற்சி - ரவிக்குமார் எம்.பி. காட்டம்!

மற்றொரு தடையாக இருப்பது, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதை நிறைவேற்ற அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் தேவை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைஅரசு பெற வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் பாதி மாநில சட்டசபைகளில்  ஒப்புதல் பெற வேண்டும். பாஜக 10 மாநிலங்களில் அதிகாரத்தைக் கொண்டுள்ள நிலையில், மற்ற 6 மாநிலங்களில் கூட்டணி ஆட்சியை அமைத்தாலும், மாநிலங்களவையில் சுமார் 38% இடங்களைக் கொண்டுள்ளது. இது மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கலை ஏற்படுத்தலாம். 

இந்த சவால்கள் இருந்தபோதிலும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து அரசு நம்பிக்கையுடன் உள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறும் என்ற நம்பிக்கையுடன், சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது மசோதாவை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிகரமாக இயற்றப்பட்டால், இந்தச் சட்டம் இந்திய ஜனநாயகத்திற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொடுக்கும். செலவுகள் கட்டுப்படுத்தப்படும். மேலும் அரசியல் உறுதியற்ற தன்மையை குறைக்கும். கூடுதலாக, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களை ஒத்திவைப்பது குறித்தும், அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுடன் சேர்த்தே நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்தை கணக்கில் கொண்டு இந்த விஷயத்தில் அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின்  சட்டமன்றத் தேர்தல்கள் நடப்பாண்டின் இறுதியில் நடக்க வேண்டும். அதே நேரத்தில் மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் நடைபெற உள்ளது. 

click me!