
உலகளாவிய பொருளாதார மந்த நிலையிலும், இந்தியா சிறப்பான வளர்ச்சி அடைந்து இருப்பதாக, பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
முதலீட்டாளர்கள் மாநாடு
பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
குஜராத்தை செயல்துடிப்பு மாநிலமாக மாற்றுவதற்கான சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, குஜராத் தலைநகர் காந்திநகரில் நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது-
‘‘மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேலின் பூமியான குஜராத், இந்தியாவின் தொழில்-வர்த்தக உணர்வை பிரதிபலிக்கும் மாநிலமாக விளங்குகிறது.
ஜனநாயகம்
ஜனநாயகம்தான் இந்தியாவின் மிகப் பெரிய பலமாகும். நமது இளைஞர்களே முக்கியமான மூலதனம். ஜனநாயகத்தால், பயன் உள்ள விரைவான ஆட்சி நிர்வாகத்தை வழங்க முடியாது என்று சிலர் கூறுகிறார்கள்.
ஆனால், இதன் மூலம் விரைவான பயனை பெற முடியும் என்பதை கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் நாம் பார்த்து இருக்கிறோம். ‘மேக் இன் இந்தியா’ பிரசார திட்டம் பெரிய வெற்றியைப் பெற்று இருக்கிறது.
6-வது பெரிய நாடு
உலகின் 6-வது பெரிய தொழில்உற்பத்தி நாடாக இந்தியா முன்னேறி உள்ளது. ஊழல், வேண்டியவர்கள், உறவினர்களுக்கு சலுகை என முன்பு இருந்த நிலையை மாற்றிய முதல், முன்னணி அரசு, பா.ஜனதா அரசாகும்.
பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்துவரும் நாடாக இந்தியா விளங்குகிறது. உலகளாவிய மந்த நிலையிலும் இந்தியா சிறப்பான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இன்றைய உலகப் பொருளாதாரத்தில் ஒளிமயமான இடத்தில் இந்தியா உள்ளது.
ஊக்குவிப்பு
மின்னனு (டிஜிட்டல்) பொருளாதாரத்தை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. மின்னணு நிர்வாகம் எளிமையானது, பயன்மிகுந்தது.
உலக வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் எந்திரமாக (என்ஜின்) இந்தியா முன்னேறி உள்ளது. இந்தியாவில் வௌிநாடுகள் தொழில் தொடங்குவதை ஊக்குவிப்பதற்காக வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன.
அன்னிய முதலீடு
இதற்காக ஒவ்வொரு நாளும் கொள்கைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. திறந்த பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இன்று விளங்குகிறது.
கடந்த 2014 மே மாதத்தில் இருந்து இந்தியாவில் அன்னிய முதலீடு ரூ.89 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அன்னிய முதலீட்டாளர்களுக்கு இந்திய பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது’’.
இவ்வாறு மோடி கூறினார்.