
வானத்தில் வெள்ளைக் காக்கா பறக்கிறது என்று பிரதமர் மோடி சொன்னால்கூட, அவருக்கு பின்னால் ஆமாம் போட்டு தலையாட்டும் ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அப்படி ஒரு கூட்டத்தினர்களில் ஒரு பகுதியினர் பங்கேற்றதுதான் ஸ்மார்ட் போன் மூலம் நடத்தப்பட்ட சமீபத்திய கருத்துக்கணிப்பு.
நமோ ஆப் எனபதே மோடியின் துதி பாடும் கூட்டம் அதன் மூலம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு 125 கோடி மக்களின் எண்ணமா ...அலசுகிறது இந்த கட்டூரை
ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் 90 சதவீதம் ஆதரவு இருப்பதாக செய்தி வௌியிட்டு மார்தட்டி வருகிறது மோடி அரசு.
நாட்டில் 80 சதவீதத்துக்கும் மேல் இருக்கும் ஏழை மக்களும், கிராமப் புற மக்களும் பங்குகொள்ளாத கருத்துக்கணிப்பு எப்படி உண்மைத் தன்மையுடன், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அடிபட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் மட்டுமே வேதனையும், வலியும் இருக்கும். பசியுடன் இருப்பவனுக்குதான் பருக்கையின் அருமை புரியும், புளித்த ஏப்பக்கார்களுக்கு சாப்பாட்டின் அருமை தெரியாது.
பாதிக்கப்பட்டவர்களிடம் கருத்துக்கணிப்புகளை நடத்துவதை விட்டு, பொதுப்படையாக கருத்துகணிப்பு என்ற பெயரில் நடத்தப்பட்டுள்ளது உண்மைத்தன்மையில் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி அறிவித்ததில் இருந்து ஏழைமக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் , வியாபாரிகளும் என்ன செய்வது அறியாது புலம்பிக்கொண்டும், தெருத்தெருவாக பணத்துக்காக ஏ.டி.எம்.களையும், வங்கிகளையும் தேடி அலைந்து வருகிறார்கள்.
குருவி சேர்த்தது போல் சேர்த்த சேமிப்பையும், பென்ஷன் பணத்தையும் எடுக்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள். மக்களின் துயரத்தைப் பார்த்த எதிர்க்கட்சிகளும் மோடியின் அறிவிப்புக்கு எதிராக தீவிரமாக போராடி நாடாளுமன்றத்தையே கடந்த 5வது நாளாக முடக்கி வருகின்றனர்.
மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், பிரதமர் மோடி ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு குறித்து கருத்து தெரிவிக்கலாம் என்று செவ்வாய்கிழமை அறிவித்து இருந்தார்.
இதையடுத்து, ‘நரேந்திர மோடி ஆப்ஸ்’ மூலம் கேள்விகள் வெளியிடப்பட்டு கருத்துக்கள் கேட்கப்பட்டன. இந்த கருதுக்கணிப்பு செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி, நேற்று நண்பகல் 3.30 மணிக்கு முடிந்தது. அதாவது, 29 மணி நேரத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 5 லட்சம் பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டதாகவும், ஒரு நிமிடத்துக்கு 400 பேர் வீதம், 2 ஆயிரம் இடங்களில் இருந்து மக்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு 93 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், 2 சதவீதம் பேர் மட்டுமே ‘மோசம்’ மற்றும் ‘ஒரு நட்சத்திரம்’ குறியீடு அளித்தனர். இதுதான் இந்த கருத்துக் கணிப்பில் வந்துள்ளதாக கூறியுள்ளனர்.
முதலில் ஒரு கருத்துக்கணிப்பு என்பது அனைத்து தரப்பினரையும் அடங்கிய வகையில், நீண்ட காலத்தில் நடத்தப்படுவது அவசியம். ஆனால், அவசரகதியில் அறிவிப்பும் வௌியாகி, கருத்துக்கணிப்பும் 27 மணி நேரத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.
நாட்டின் 125 கோடிமக்களையும் பாதித்துள்ள அரசின் நடவடிக்கை குறித்து கருத்துக்களை அறிய 0.1 சதவீதம் (5லட்சம்) கூட இல்லாத மக்களிடம் மத்திய அரசு கருத்துக்கணிப்பு நடத்தி அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது எந்த வகையில் நியாயம் என்பது பொதுமக்கள் தரப்பில் கேள்வியாக இருக்கிறது.
இந்த கருத்துக்கணிப்பில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றார்களா? என்பது குறித்து அரசு ஏதும் தெரிவிக்கவில்லை.
அதாவது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாத அறிவிப்பு என்பது, கிராமப்புற ஏழைகள், நடுத்தர மக்கள், நகர்புற மக்கள், சிறு நகரங்களில் வாழும் மக்கள் என அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது. அப்படி இருக்கையில், அனைத்து தரப்பினரும் அடங்கியவாறு அல்லவா? கருத்துக்கணிப்பு நடத்தி இருக்க வேண்டும்.
மேலும், கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் யார்?, அவர்கள் நகரங்களைச் சேர்ந்தவர்களா, கிராமங்களைச் சேர்ந்தவர்களா?, கல்வித்தகுதி என்ன?, வயது என்ன?, முதியோர்களா?, அரசு ஊழியர்களா?, சிறு வியாபாரிகளா?, குடும்ப பெண்களா?, பெரு வணிகர்களா?, மாணவர்களா? என எந்த விவரமும் குறிப்பிடவில்லை.
ஏனென்றால், ரூபாய் நோட்டு தடை என்பது, ஏழைமக்கள், நடுத்தர மக்களைத்தான் அதிகமாகப் பாதித்துள்ளது. அப்படி இருக்கையில் பாதிக்கப்பட்டவர்களிடம் தான் கருத்துக்கணிப்பு நடத்தி அரசு தனது கொள்கை முடிவு சரியா? தவறா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர பொதுப்படையாக கருத்துக்கணிப்பை நடத்தி முடிவு வெளியிடுவது நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கிறது.
அதிலும் களநேரடி ஆய்வு நடத்தி முடிவுகளைத் தெரிந்து கொள்ள வேண்டிய விசயத்தில் ஸ்மார்ட் போன் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தியது நகைப்புக்குரியதாக இருக்கிறது என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.
அதிலும் ஸ்மார்ட் போனில் மட்டும் பயன்படக்கூடிய பிரதமரின் செயலி மூலம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. 125 கோடி மக்கள் வாழும் நாட்டில், 17 சதவீத மக்களிடம் மட்டுமே ஸ்மார்ட் போன் இருக்கிறது. இந்த 17 சதவீதத்தில் பிரதமர் மோடியின் செயலி இருக்கும் நபர்கள் அளவு மிகக் குறைவாகும்.
மேலும், கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் அரசுக்கு சாதகமான பதில்கள் வரும் வகையில்தான் அமைந்துள்ளன. கருப்பு பணத்தை ஒழிக்க விரும்புகிறீர்களா?, அரசு போராட வேண்டுமா?, அரசின் நடவடிக்கை எப்படி இருக்கிறது ?என அரசின் நடவடிக்கைகள் குறித்தே கேள்விகள் இருக்கின்றன.
ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக எந்த விதமான கேள்விகளும் இல்லை. இந்த நடவடிக்கையால் எந்த தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டார்கள்?, வரிசையில் நிற்பதில் சிரமம் இருக்கிறதா?, பணப்பற்றாக்குறை இருக்கிறதா?, விலைவாசி குறைந்து இருக்கிறதா?, வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா? இதுபோன்ற மக்களின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் கேள்விகள் ஏதும் இல்லை.
இந்தியாவில் படிப்பறிவில்லாத மக்கள் 40 கோடிக்கும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வங்கியில் ஒரு படிவத்தைக் கூட பூர்த்தி செய்யத் தெரியாது. அப்படி இருக்கையில், மிகச் சொற்பகாக ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் மக்களிடம், நடுநிலை நிறுவனம் மூலம் நடத்தாமல், பிரதமர் மோடியின் செயலி மூலம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது வேடிக்கையானது.
கிராமங்களைப் பற்றியும், விளிம்புநிலை மக்களைப் பற்றியும் சிந்திக்காமல் பிரதமர் மோடி அறிவிப்பும் வெளியிட்டு விட்டு, தனது நடவடிக்கை சரி தான் என்பதை நியாயப்படுத்தும் வகையில், தனது சார்பானவர்களிடமே கருத்துக்கணிப்பையும் நடத்தியுள்ளார்.
பொதுமக்கள் இடையே பொங்கி வரும் கோபத்துக்கு அணை போட பொய்யாக கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பை நடத்தி கொள்ளைபுறம் வழியாக அரசுக்கு போலீயாக ஆதரவு தேடுகிறார் என்றே கருத வேண்டி உள்ளது. இதில் எத்தனை பேர் பாஜக , இந்துத்துவ ஆதரவாளர்களோ, யாரறிவார்.