
நாட்டில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்த பிரதமர் மோடியின் நடவடிக்கை குறித்து ‘நரேந்திர மோடி ஆப்ஸ்’ மூலம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 93 சதவீத மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
மக்கள் ரூபாய் நோட்டு தடை உத்தரவில் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்ட பின் இந்த சர்வே நடந்தது.
தடை அறிவிப்பு
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி அறிவித்தார். ஆனால், பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நடுத்தர வர்க்கத்தினரும், ஏழைகளும் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் தீவிரமாக போராடி வருகின்றன.
எதிர்ப்பு
மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், பிரதமர் மோடி ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு குறித்து கருத்து தெரிவிக்கலாம் என்று நேற்று முன் தினம் அறிவித்து இருந்தார்.
அதிவிரைவு
இதையடுத்து, நரேந்திரமோடி ஆப்ஸ் மூலம் கேள்விகள் வெளியிடப்பட்டு கருத்துக்கள் கேட்கப்பட்டன. இந்த கருதுக்கணிப்பு செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி, நேற்று நண்பகல் 3.30மணிக்கு முடிந்தது.
5 லட்சம் பேர்
ஏறக்குறைய 5 லட்சம் பேர் இந்த கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டனர். ஒரு நிமிடத்துக்கு 400 பேர் வீதம் கருத்துக்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர். நாட்டின் 2 ஆயிரம் இடங்களில் இருந்து மக்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
வெளியீடு
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், “நாட்டில் இதற்கு முன் இதுபோல் கொள்கை முடிவு அல்லது அரசியல் முடிவு தொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது இல்லை.
93 சதவீதம் ஆதரவு
500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு 93 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
2 சதவீதம் பேர் மட்டுமே ‘மோசம்’ மற்றும் ‘ஒரு நட்சத்திரம்’ குறியீடு அளித்தனர்.
5 ஸ்டார்
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு 90 சதவீதம் பேர் 4 நட்சத்திர குறியீடுகளை அளித்துள்ளனர். 73 சதவீதம் பேர், 5 நட்சத்திரங்கள் குறியீடு அளித்து சிறப்பான திட்டம் என்று தெரிவித்துள்ளனர்.
.ஊழல் ஒழிப்பு குறித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு மிக நன்று என 92 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 57 சதவீதம் பேர், அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை சிறப்பானது என்று தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்தார்.
நன்றி
இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற மக்களுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், “ வரலாற்று சிறப்பு மிக்க கருத்துக்கணிப்பில் பங்கேற்ற மக்களுக்கு நன்றி. மக்களின் கருத்துக்களை பார்ப்பது திருப்தி அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.