மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையில் மர்ம கும்பல் பாஜக தலைவர்களின் வீடு மட்டும் அலுவலகங்களுக்கு தீ வைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே 3 ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கும் மேலாக வன்முறை, கலவரம் நீடிக்கிறது. இதில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மைதேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. பின்னர் இது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவி, மணிப்பூர் பற்றி எரிந்தது.
மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் கலவரக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசியல்வாதிகளின் வீடுகள் அடையாளம் தெரியாத கும்பல்களால் தாக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகிறது.
இம்பாலில் மத்திய அமைச்சர் ஒருவரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, வெள்ளிக்கிழமை இரவு மணிப்பூர் பாஜக தலைவர் ஏ.சாரதா தேவி மற்றும் மாநில அமைச்சரவை அமைச்சர் பிஸ்வஜித் சிங் ஆகியோரின் வீடுகளுக்கு தீவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் பாதுகாப்பு படையினர் கும்பலை கலைத்தனர்.
இம்பாலில், பாஜக அலுவலகம், பாஜக தலைவர்களின் வீடுகள் மற்றும் காவல் நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.40 மணியளவில் இம்பாலின் கிழக்கில் உள்ள தோங்ஜு அருகே ஒரு பெரிய கும்பல் ஒன்று கூடி, பாஜக அமைச்சர் பிஸ்வஜித் சிங்கின் வீட்டை சேதப்படுத்த முயன்றது. கும்பலை விரைவு அதிரடிப் படை (RAF) வீரர்கள் கலைத்தனர்.
தட்டி தூக்கலாமா..! ஜூன் 20ல் ஆஜர், இல்லைனா.? செந்தில் பாலாஜி தம்பிக்கு அமலாக்கத்துறை போட்ட ஸ்கெட்ச்
பிறகு நள்ளிரவுக்குப் பிறகு 200-300 பேர் கொண்ட கும்பல் இம்பாலில் உள்ள சிங்ஜமேயில் உள்ள பாஜக அலுவலகத்தைச் சுற்றி திரண்டதாகக் கூறப்படும் நிலையில், இம்பாலில் மேற்கு பகுதியில் உள்ள மாநில பாஜக தலைவர் ஏ.சாரதா தேவியின் வீட்டை சேதப்படுத்த ஒரு தனி முயற்சி நடந்தது. பிறகு பாதுகாப்பு படையினர் அக்கும்பலை கலைத்தனர்.
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் கிடங்கை ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது. நள்ளிரவுக்கு அருகில் இரிங்பாம் காவல் நிலையத்தை சூறையாடும் முயற்சியும் நடந்தது. அது மீண்டும் முறியடிக்கப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறைகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. மோதல்களால் கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர் !