மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் சிதைந்த பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை கடற்கரைக்கு அருகே கண்டறியப்பட்டுள்ளன
இந்திய விமானப் படையின் ஏஎன்-32 விமானம் (பதிவு கே-2743) கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதியன்று வங்காள விரிகுடாவில் ஓபி பணியின் போது காணாமல் போனது. அந்த விமானத்தில் 29 பணியாளர்கள் இருந்தனர். விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் பெரிய அளவிலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளால் காணாமல் போன பணியாளர்களையோ அல்லது விமான பாகங்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் சிதைந்த பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு கண்டறியப்பட்டுள்ளன. புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம், காணாமல் போன ஏ.என்-32 கடைசியாக தென்பட்ட இடம் என அறியப்பட்ட இடத்தில் ஆழ்கடல் ஆய்வு திறன் கொண்ட ஒரு தன்னாட்சி வாகனத்தை (ஏ.யு.வி) அண்மையில் நீருக்கடியில் நிறுத்தியது.
மல்டி பீம் சோனார் (சவுண்ட் நேவிகேஷன் மற்றும் ரேங்கிங்) உட்பட பல பேலோட்களைப் பயன்படுத்தி 3400 மீட்டர் ஆழத்தில் செயற்கை துளை சோனார் மற்றும் உயர் தெளிவுத்திறன் புகைப்படம் எடுத்தல் முறையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேடல் படங்களை பகுப்பாய்வு செய்ததில், சென்னை கடற்கரையில் இருந்து சுமார் 140 கடல் மைல் (சுமார் 310 கி.மீ) தொலைவில் கடல் படுகையில் விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைந்த பாகங்கள் இருப்பது தெரியவந்தது.
யார் இந்த கோத்தாரி சகோதரர்கள்? எதற்காக அவர்களது சகோதரிக்கு ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அழைப்பு?
தேடுதலின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்ததில் ஏஎன்-32 ரக விமானத்துடன் அவை ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் கிடைத்த இந்த ஆய்வு புகைப்படம், அதே பகுதியில் காணாமல் போன வேறு எந்த விமானத்தின் பதிவுகளையும் கொண்டிருக்கவில்லை. எனவே இந்தச் சிதைந்த பகுதிகள் விபத்துக்குள்ளான ஐஏஎஃப் ஏஎன் -32க்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.