
2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தாயை, டி.வியில் ஒளிபரப்பான 2 நிமிடச் செய்தி கண்டுபிடிக்க உதவி, மகளுடன் இணைத்துள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி நகரைச் சேர்நதவர் சாந்தா(வயது74). இவர் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். சாந்தா மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஆழப்புழா மாவட்டம், மாவேலிக்கரா நகரில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக சாந்தா பஸ்ஸில் சென்றார். ஆனால், சாந்தா தனது மறதி நோயால் வேறு பஸ்ஸில் ஏறி எங்கோ சென்றுவிட்டார், மகள் வீட்டுக்கும் செல்லவில்லை.
இதையடுத்து, சாந்தாவின் மகள் பகுலேயன் தனது தாய், வீட்டுக்கு வராதது குறித்து தனது சகோதரரிடம் கூறியுள்ளார். அவரோ பஸ்ஸில் மாவேலிக்கரா அனுப்பி விட்டதாக கூறியுள்ளார். இதனால், பதற்றமடைந்த மகனும், மகளும், பல இடங்களில் தங்களின் தாய் சாந்தாவை தேடியுள்ளனர். ஆனால், சாந்தா கிடைக்கவில்லை.
இதையடுத்து, அவர்கள் கருநாகப்பள்ளி போலீஸ் நிலையத்தில் சாந்தா காணமல் போனது குறித்து புகார் செய்தனர். போலீசாரும் கடந்த 2 ஆண்டுகளாகத் தேடியும் சாந்தாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், கடந்த 19-ந்தேதி சாந்தாவின் மகள் பகுலேயன், வீட்டில் டி.வி பார்ப்பதற்காக ஆன்-செய்துள்ளார். அதில், ‘மனோரமா’ சேனலில், செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டு இருந்தபோதுதான் அந்த காட்சி அவரின் கண்களில் பட்டது.
டி.வியில் ஒளிபரப்பாகிய 2 நிமிட செய்தியில், பத்தினம்திட்டா மாவட்டம், திருவல்லா நகரில் உள்ள முதியோர் இல்லத்தில நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் தனது தாய் அமர்ந்திருப்பதைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார். இதைப்பார்த்த பகுலேயனுக்கு அவர் கண்களையே அவரால் நம்பமுடியவில்லை.
இதையடுத்து, உடனடியாக, பகுலியன் தனது சகோதரர், சகோதரி லட்சுமி உள்ளிட்ட உறவினர்களை அழைத்துக்கொண்டு திருவனந்தபுரம் சென்றார். அங்கு உள்ள மனோரமோ தொலைக்காட்சி நிர்வாகிகளை அனுகி நடந்த விவரங்களைக் கூறி அந்த முதியோர் இல்லத்தின் முகவரியைப் பெற்றார்.
அதன்பின், திருவல்லா சென்ற பகுலியன் அந்த முதியோர் இல்லத்தில் இருந்த தனது தாய் சாந்தாவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
இது குறித்து சாந்தாவின் இளைய மகளும், பகுலியனின் சகோதோரியுமான லட்சுமி கூறுகையில், “ நாங்கள் பல இடங்களில் எங்களுடைய தாயை தேடினோம், போலீசில் புகாரும் செய்திருந்தோம். ஆனால், அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால், மனோரமா சேனலில் ஒளிபரப்பாகிய செய்தியைப் பார்த்து எனது சகோதரி கூறியபின் தான் அந்த முதியோர் இல்லத்துக்கு சென்று எங்களின் தாயை சந்தித்தோம்.
எங்களின் தாய்க்கு மறதிநோய் கூடுதலாகி, அவரின் பெயர், வீட்டு முகவரியைக் கூட மறந்துவிட்டதாக முதியோர் இல்லத்தில் உள்ள நிர்வாகிகள் எங்களிடம் தெரிவித்தனர். ஆனால், தனக்கு 5 பிள்ளைகள் இருப்பதை மட்டும் தொடர்ந்து சொல்லி இருக்கிறார். இதனால், என் தாயை எங்களுடன் சேர்த்து வைப்பதில் முதியோர் இல்ல நிர்வாகிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டது.
எங்கள் அம்மாவைத் தேடி அலையாத இடம் இல்லை. சபரிமலைக்கு செல்பவர்களிடம் போட்டோக்களை கொடுத்து அனுப்பி அங்கு இருந்தால் தகவல் தெரிவிக்கவும் கூறி இருந்தோம்.
பிள்ளைகள் எத்தனை ஆண்டுகளுக்கு பின் தாயைப் பார்த்தாலும், அதேபோல தாயும் பிள்ளைகளைப் பார்த்தாலும் அடையாளம் கண்டுகொள்வார்கள். எங்களின் தாயை 2 ஆண்டுகள் கழித்து பார்த்தவுடன் அடையாளம் கண்டோம், அவரும் எங்களைப் பார்த்தவுடன் ஓடிவந்து கட்டித் தழுவிக்கொண்டார்.
அதன்பின் அங்குள்ள நிர்வாகிகளிடம் கூறி எங்களின் அம்மாவை அழைத்து வந்துவிட்டோம். இப்போது அவருக்கு மீண்டும் பழைய நினைவுகள் வரத் தொடங்கிவிட்டன என்பது மகிழ்ச்சிக்குரியது. எங்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறிது முன்கூட்டியே வந்துவிட்டது. காணாமல் போன எங்களின் அம்மா எங்களுக்கு கிடைத்துள்ளதால், மிகச்சிறப்பான கிறிஸ்துமஸ் பண்டிகையாக இருக்கப்போகிறது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.