சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டி பணம் பறிப்பவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து திமுக எம்.பி. கனிமொழி என்விஎன் சோமு கேள்விக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்களை ஏமாற்றி, மிரட்டி பணம் பறிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இது தொடர்பான வழக்கு விபரங்கள் பற்றி மாநிலங்களவையில் திமுக எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார். அதில், “இணையதளப் பயனாளர்கள் அனைவருக்கும் சுதந்திரமான, பாதுகாப்பான, நம்பிக்கையான பொறுப்புள்ள இணையதள சேவை வழங்குவதை உறுதிசெய்வதுதான் அரசின் நோக்கம். இணையதள சேவையைத் தவறாகப் பயன்படுத்தி, பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக தவறான நபர்கள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் பொதுமக்களை பல வகையிலும் பாதிப்படையச் செய்கிறார்கள் என்பதை அரசு உணர்ந்திருக்கிறது.
2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் ஒரு பகுதியாக 2021ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட டிஜிட்டல் மீடியாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் இத்தகைய இணையதளம் மற்றும் சமூக வலைதள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் வழிகாட்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இணையதளக் குற்றங்களைக் குறைக்கவும், அதுகுறித்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கவும் மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் தேசிய அளவில் சைபர் குற்றங்களைப் பதிவு செய்ய cybercrime.gov.in என்ற பிரத்யேகப் போர்ட்டல் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, இணையதளக் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தியும் இத்தகைய குற்றங்களை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் கீழ் செயல்படும் சட்டத்தை அமல்படுத்தும் விசாரணை அமைப்புகள் மூலம் இணையதளக் குற்றங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படுகிறது.” எனவும் அமைச்சர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோ வழக்கு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
தேசியக் குற்றப் பதிவேட்டு அமைப்பின் அறிக்கையின்படி, அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்த பதிலில், இனையதளம் மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி, பொதுமக்களை அச்சுறுத்தியும், ஏமாற்றியும் பணம் பறித்ததாக, மிரட்டியதாக 2019 முதல் 2021 வரையிலான மூன்றாண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 1350 வழக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, தமிழகத்தில் இந்த மூன்றாண்டுகளில் 75 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.