
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா: பஹல்காமில் இந்திய சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மையங்களை குறிவைத்து தாக்கியது. இதில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவமும் எல்லை தாண்டி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் ‘சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புது தில்லியில் நடைபெற்ற 20வது இந்தியா-ஈரான் கூட்டு ஆணையக் கூட்டத்தில் பேசிய ஜெய்சங்கர், ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக மே 7ஆம் தேதி இந்தியா தாக்குதல் நடத்தியதாக ஈரானிய அமைச்சரிடம் தெரிவித்தார். “இந்தத் தாக்குதல் எங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். எங்கள் பதிலடி குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடத்தப்பட்டது. இந்த நிலைமையை மேலும் மோசமாக்க எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. ஆனால், எங்கள் மீது இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது” என்று அவர் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
100 பயங்கரவாதிகள் பலி
இந்தியாவின் ‘சிந்தூர்’ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் குழு அறிவித்த ஒரு நாள் கழித்து, ஜெய்சங்கரின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. இதனிடையே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தளம் மற்றும் முரித்கேவில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா தலைமையகம் உட்பட 9 இலக்குகளில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.