
நாடு முழுவதும் எளிதாக கிடைக்கும் பால் பிராண்டுகள் குறித்து சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு கவலைக்கிடமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
தினமும் தேநீர், காபி, குழந்தைகளின் காலை உணவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பால் பாதுகாப்பானதா என்ற கேள்வியை இது எழுப்புகிறது. இன்டிபென்டென்ட் ஆய்வக சோதனைத் திட்டமான டிரஸ்டிஃபைட்டின் கூற்றுப்படி அமுல், மதர் டெய்ரி மற்றும் கன்ட்ரி டிலைட் போன்ற பிரபல பிராண்டுகளின் பால் மாதிரிகளை பரிசோதனை செய்ததாக தெரிவித்துள்ளது.
இந்த பரிசோதனையில் மொத்த தட்டு எண்ணிக்கை (TPC) மற்றும் கொலிஃபார்ம் பாக்டீரியா அளவுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. இவை பால் நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் இல்லாமல் இருக்கிறதா என்பதைக் காட்டும் முக்கிய அளவுகோல்கள் ஆகும். அறிக்கையின்படி, மதர் டெய்ரி காளைப் பால் மாதிரியில் TPC அளவு 2,40,000 CFU/ml என பதிவாகியுள்ளது.
இது FSSAI நிர்ணயித்துள்ள 30,000 CFU/ml பாதுகாப்பு வரம்பை விட பல மடங்கு அதிகம் என கூறப்பட்டுள்ளது. Country Delight பால் மாதிரியிலும் 60,000 CFU/ml என, நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட இரட்டிப்பு அளவு இருந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமுல் தாசா மற்றும் அமுல் கோல்டு பால் மாதிரிகள் அதிக அளவில் கொலிஃபார்ம் பாக்டீரியா கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனுடன், அமுல் மஸ்தி தாஹி மாதிரியிலும் அதிக நுண்ணுயிர் அளவுகள் இருப்பதாக Trustified தெரிவித்துள்ளது. இருப்பினும், அமுல் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, தங்கள் தயாரிப்புகள் FSSAI தரநிலைகளை பூர்த்தி செய்கின்றன என்று விளக்கம் அளித்துள்ளது. FSSAI இதுவரை அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை. மேலும், Eggoz நிறுவன முட்டைகளில் AOZ எனும் தடைசெய்யப்பட்ட வேதிப்பொருள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வேதிப்பொருள் நீண்டகால சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடும். அமுல், மதர் டெய்ரி, கன்ட்ரி டிலைட் போன்றவை லக்ஷுரி பிராண்டுகள் அல்ல. பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் அடிப்படை உணவுப் பொருட்கள். இவ்வாறு நம்பிக்கைக்குரிய பிராண்டுகள் குறித்து சந்தேகம் எழும்போது, உணவு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முறைகள் குறித்து பொதுமக்கள் கவலைப்படுவது வழக்கமான ஒன்றுதான்.