
தாயின் உடலை 52 கிலோ மீட்டர் சுமந்து சென்று தகனம்… ராணுவ வீரரின் நெகிழ வைக்கும் செயல்…
காஷ்மீர் மாநிலம் பதன்கோட் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர், இறந்த தனது தாயின் உடலை, 52 கிலோ மீட்டர் தூரத்திற்கு பனிமூடிய பாதையில் சுமந்து சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில், கர்ணா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அப்பாஸ்.
ராணுவ வீரரான இவர், பதன்கோட் ராணுவ முகாம் பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் பனிப்பொழிவு அதிகரித்த நிலையில், கிராமத்தில் இருந்த தனது தாயாரை தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்திருந்தார் ராணுவ வீரர் முகமது அப்பாஸ்.
ஆனால் கடந்த 28-ம் தேதி, எதிர்பாராத விதமாக அப்பாஸின் தாயார் மரணமடைந்தார்.
தனது தாயின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்து உதவவேண்டும் என அப்பாஸ், ராணுவ உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், இவரின் கோரிக்கையை உயர் அதிகாரிகள் அலட்சியப்படுத்தியுள்ளனர். இதனால் 3 நாட்கள் தாயின் சடலத்துடன் காத்திருந்த அப்பாஸ், வேறுவழியின்றி, 52 கிலோ மீட்டர் தூரத்திற்கு, தனது தாயின் உடலை, தோளில் சுமந்தபடி சென்று சொந்த ஊரில் நல்லடக்கம் செய்தார்.
பனிமூடிய சாலையில், தாயின் சடலத்தை எடுத்துச் சென்ற காட்சிகள் தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.