12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு… அச்சத்தில் கரையோர மக்கள்…

By Selvanayagam PFirst Published Aug 15, 2018, 1:37 PM IST
Highlights

12  ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி..  நேற்று, மேட்டூர் அணைக்கு, வினாடிக்கு, 85 ஆயிரம் கன அடி நீர் வந்தது. அணையில் இருந்து, பாசனத்துக்கு, 35 ஆயிரம் கன அடி, உபரியாக, 50 ஆயிரம் கன அடி நீர், காவிரியில் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம், 120.31 அடியாக இருந்தது.

இந்நிலையில் கர்நாடக நீர்ப் பிடிப்பு பகுதியில், மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்ததால், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர் வரத்து அதிகரித்தது.இதையடுத்து  கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர்  உபரி நீர்  வெளியேற்றப்படுகிறது. இதே போல் கபினி  அணையில் இருந்து  80 ஆயிரம்  அடி கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

இந்த  இரு அணைகளில் இருந்தும், கிட்டத்தட்ட 2 லட்சம் கன நீர் வெளியேற்றப்படுவதால்  மேட்டூர் அணைக்கு  நீர் வரத்து, மீண்டும் அதிகரித்துள்ளது. இதையடுத்து  காவிரி கரையோரத்தில் உள்ள, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை மாவட்ட மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்  பகுதி முழுவதும் நீரில் மூழுகி பிரமாண்டமாக தண்ணீர் கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அனைத்து அருவிகளும் மூழ்கின. அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு, பூட்டு போடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும்  நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ,  காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது.

இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மேட்டூர் அணையில் இருந்தது திறக்கப்படும் தண்ணீர் என தெரிகிறது. இதனால் கரையோர மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறுகளின் கரையோரம் சென்று செல்ஃபி எடுக்க வேண்டாம் என்றும், ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேட்டூரில் திறக்கப்படும் நீருடன் பவானி, அமராவதி ஆறுகளின் நீர் கலக்கும். எனவே காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார். தடைசெய்யப்பட்ட தரைப்பாலங்களை மக்கள் கடந்து செல்ல வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துளளார்.

click me!