ரூ.2500 கோடி மதிப்பிலான 'மியாவ் மியாவ்' போதைப்பொருள் பறிமுதல்!

By Manikanda PrabuFirst Published Feb 21, 2024, 4:24 PM IST
Highlights

டெல்லி, புனேயில் நடைபெற்ற சோதனையில் ரூ.2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 'மியாவ் மியாவ்' போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

தலைநகர் டெல்லி மற்றும்  புனேவில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில், ரூ.2500 கோடி மதிப்பிலான, சுமார் 1,100 கிலோகிராம் எடை கொண்ட 'மியாவ் மியாவ்' என்று அழைக்கப்படும் Mephedrone (MD) என்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

புனேவில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூன்று பேரை அண்மையில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 700 கிலோ மெபெட்ரோன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்றுள்ளது.

அதில், டெல்லியின் ஹவுஸ் காஸ் பகுதியில் உள்ள குடோனில் இருந்து 400 கிலோ மெபெட்ரோன் கைப்பற்றப்பட்டுள்ளது. புனேவின் குர்கும்ப் எம்ஐடிசி பகுதியில் அதிக அளவிலான மெபெட்ரோன் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம்  புனே காவல்துறையால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களிலேயே இதுதான் அதிகமானது. அத்துடன், நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்களிலும் இது ஒன்றாகும்.

புனேவின் குர்கும்ப் எம்ஐடிசி பகுதியில் இருந்து டெல்லியில் உள்ள சேமிப்பு கிடங்களுக்கு கடத்தல் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக மூன்று கொரியர் நிறுவனங்கள் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொலைத் தொடர்புத் துறையில் முந்தைய அரசுகள் முறைகேடு: அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குற்றச்சாட்டு!

கைது செய்யப்பட்டுள்ள அவர்களை கொரியர் பாய்ஸ் என்று அழைத்த புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார், அவர்கள் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்தார். “போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க மற்ற விசாரணை அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து இந்த வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.” எனவும் அமிதேஷ் குமார் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அனில் சேபிள், போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புனே தொழிற்சாலையின் உரிமையாளர் ஆவார். மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள டோம்பிவலியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் லலித் பாட்டீலுக்கும் இடையே சாத்தியமான தொடர்பு இருப்பதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கில் பாட்டீலுக்கு எந்த அளவுக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

click me!