
தமிழகத்தைச் சேர்ந்த வி.சண்முகநாதன் என்பவர் மேகாலய மாநில ஆளுநராக கடந்த 2015-ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டு பதவி வகித்து வந்த நிலையில், வி.சண்முகநாதன் மீது ஒரு பெண் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
ஆளுநர் வி.சண்முகநாதன், அலுவல் பணி இல்லாத நேரங்களில் மாளிகைக்குள் பல்வேறு பெண்கள் அனுமதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், வி.சண்முகத்துக்கு எதிராக ஆளுநர் மாளிகையின் அதிகாரிகள் ஒன்று திரண்டு அவர் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து போர்க்கொடி தூக்கினர் .
மேலும் அதுதொடர்பான ஒரு கடிதத்தையும் இந்திய குடியரசுத் தலைவருக்கும் ஆளுநர் மாளிகை பணியாளர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், வி.சண்முகநாதன் மேகாலய மாநில ஆளுநர் பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். இந்தியக் குடியரசுத்தலைவர் திரு.பிரணாப்முகர்ஜி, வி.சண்முகநாதனின் ராஜினாமா கடிதத்தை இன்று ஏற்றுக்கொண்டுள்ளார்.
தற்சமயம் அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் பன்வரிலால் புரோகித், மேகாலய மாநிலத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப்பிரதேச மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராக நாகாலந்து மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்துவரும் ஆச்சாரியாவுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.