லலித் ஜா சரணடைவதற்காக காவல் நிலையத்திற்கு வந்தபோது அவருடன் மகேஷ் என்ற மற்றொரு நபரும் இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா என்பவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். கடமைப் பாதையில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று அவர் சரணடைந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போலீசார் அவரை முறைப்படி கைது செய்து மாவட்ட காவல்துறை சிறப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். கொல்கத்தாவைச் சேர்ந்த ஆசிரியரான இவர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், டெல்லியில் அவரே சரண் அடைந்துள்ளார்.
லலித் ஜா பேருந்தில் நீம்ரானா வழியாக ராஜஸ்தானின் நாகௌருக்குச் சென்றதாகக் கூறினார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு இரண்டு நண்பர்களுடன் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த அவர், போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்ததும் டெல்லிக்குத் திரும்பியுள்ளார்.
லலித் ஜா சரணடைவதற்காக காவல் நிலையத்திற்கு வந்தபோது அவருடன் மகேஷ் என்ற மற்றொரு நபரும் இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாகர் மற்றும் மனோரஞ்சன் ஆகிய இரண்டு இளைஞர்கள் புதன்கிழமை பாதுகாப்பை மீறி மக்களவையில் நுழைந்து புகைக்குப்பிகளை வீசி அரசுக்கு எதிராக முழுக்கமிட்டனர். அவைக்கு வெளியிலும் நீலம் தேவி மற்றும் அமோல் ஷிண்டே என்ற இரண்டு பெண்கள் புகைகுப்பிகளைத் திறந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. குர்கானில் நால்வரும் விஷால் என்பவரின் வீட்டில் தங்கிருந்ததாக அவரும் கைதாகியுள்ளார்.