
பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட இடதுசாரி ஆதரவாளர்கள் 5 பேரையும் செப்டம்பர் 5-ம் தேதி வீட்டுக்காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் மோடியை கொல்ல சதி தீட்டியதாக கூறி மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவ்லகா, இடதுசாரி சிந்தனையாளர் வரவர ராவ், இடதுசாரி சிந்தனையாளரும் வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ், வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா ஆகியோர் மகாராஷ்டிர போலீசாரால் அதிடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இவர்கள் 5 பேரையும் கைது செய்யப்படும் போது, விதிகளை சரியாக பிற்பற்றவில்லை என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்தது. இது மனித உரிமைகளை மீறும் செயல் என்று மகாராஷ்டிரா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு 3 நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கைது செய்யப்பட்ட 5 பேரையும் செப்டம்பர் 5-ம் தேதி வரை வீட்டுக்காவலில் மட்டும் வைக்கும்படி உத்தரவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.