கருப்புச் சட்டை போராட்டம்! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை பேசவைக்க படாத பாடு படும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

By SG Balan  |  First Published Jul 26, 2023, 11:57 PM IST

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரிவரும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் வியாழக்கிழமை கருப்புச் சட்டையுடன் நாடாளுமன்றத்திற்கு வரவுள்ளனர்.


மணிப்பூர் விவகாரத்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணியைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் வியாழன் அன்று நாடாளுமன்றத்திற்கு கருப்பு ஆடை அணிந்து வருவார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் கருப்பு உடை அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

புதன்கிழமை எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று ஏற்றுக்கொண்டார். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு தீர்மானம் மீதான விவாதத்திற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா சொல்லி இருக்கிறார். அடுத்த வாரம் விவாதம் நடைபெறக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

பல்வேறு பிரச்சனைகளில் அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் கருப்பு உடையை நாடுகின்றன.

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்துவதற்கு முன், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், கடந்த ஐந்து நாட்களாக இரு அவைகளிலும் அமளி நிலவுகிறது. ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

மே 3 அன்று மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்ததில் இருந்து 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் மணிப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!