மணிப்பூர் முதல்வர் ராஜினாமா செய்ய மாட்டார்; குகு சமூகத்திடம் பேசிய அமித் ஷா!

By Manikanda Prabu  |  First Published Jul 21, 2023, 12:55 PM IST

மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் ராஜினாமா செய்ய மட்டார் என அம்மாநில அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன


வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நிலவி வருகிறது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், அம்மாநிலத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 4ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு  செய்யப்பட்டு 63 நாட்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து விட்டு, வீடியோ வெளியாகி கண்டனங்கள் எழுந்ததையடுத்தே, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனவும், பிரதமர் மோடி இரு அவைகளிலும் விரிவான அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், வலியுறுத்தி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

பிரதமர் விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று ‘INDIA’ எதிர்பார்க்கிறது - கார்கே ட்வீட்..

மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இதில் தொடர்புடையவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளார். ஆனால், இத்தனை நாட்கள் அமைதியாக இருந்து விட்டு, வெறும் 30 நொடிகள் மட்டுமே மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன. மேலும், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் ராஜினாமா செய்ய மட்டார் என அம்மாநில அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. “முதலமைச்சரை மாற்றுவது குறித்து எந்த விவாதமும் இல்லை, சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதே முன்னுரிமை.” என அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், மணிப்பூரில் தற்போது சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், குகு சமூகத்தினரிடம் இன்று காலை பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. மாநில அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் இரு மாதங்களாக மோதல்கள் நீடித்து வரும் நிலையில், முதல்வர் பைரன் சிங், தனது  பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக இம்மாத தொடக்கத்தில் ஒரு தகவல் வெளியானது. இரண்டு மாதங்களாகியும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தத் தவறியதால், முதல்வர் பைரன் சிங் ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்பட்டது. அதேசமயம் அவர் ராஜினாமா செய்யக் கூடாது என்ற கோரிக்கைகளும் அம்மாநிலத்தில் வலுத்தன.

இதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தெரிவித்தார். “இந்த முக்கியமான தருணத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!