
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்த 60 வயதுப் பெண்ணை, கழுத்தை நெரித்துக் கொலை செய்த 45 வயது நபரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கடந்த நவம்பர் 14-ம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள சந்பா (Chandpa) பகுதியில் சாலையோரத்தில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. உயிரிழந்த பெண் யார் என்பதைக் கண்டறியவும், குற்றவாளியைப் பிடிக்கவும் 5 மாவட்டங்களில் உள்ள சுமார் 1,000 சிசிடிவி (CCTV) கேமராக்களைப் போலீஸார் ஆய்வு செய்தனர்.
இந்த விசாரணையில், உயிரிழந்தவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜோஷினா (60) என்பதும், அவரைக் கொலை செய்தவர் ஆக்ராவைச் சேர்ந்த இம்ரான் (45) என்பதும் தெரியவந்தது.
ஜோஷினாவின் மகள் மும்தாஜுக்கும், ஆக்ராவைச் சேர்ந்த சத்தார் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க இம்ரான் உதவியுள்ளார். இம்ரானின் மாமனார் வீடு, மேற்கு வங்கத்தில் ஜோஷினாவின் வீட்டுக்கு அருகில் உள்ளது. இதனால் இம்ரானுக்கும் ஜோஷினாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நெருக்கமான உறவாக மாறியுள்ளது.
கடந்த நவம்பர் 10-ம் தேதி தனது பேத்தியின் திருமணத்திற்காகக் கொல்கத்தாவில் இருந்து வந்த ஜோஷினா, இம்ரானைச் சந்தித்துத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் வசிக்கும் இம்ரான் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த இம்ரான், ஜோஷினாவைக் கொலை செய்யத் திட்டமிட்டார். நவம்பர் 13-ம் தேதி, ஜோஷினாவைத் திரும்பக் கொல்கத்தாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். பஸ்ஸில் ஏறி ஹாத்ரஸ் பகுதிக்கு வந்த அவர்கள், நக்லா பூஸ் என்ற இடத்தில் இறங்கியுள்ளனர். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஜோஷினாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர், போலீஸாரை திசைதிருப்பவும், வேறு யாரோ பாலியல் வன்புணர்வு செய்து கொன்றது போலக் காட்டுவதற்காகவும், ஜோஷினாவின் ஆடைகளைக் கலைத்துப் போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஹாத்ரஸ் அருகே உள்ள ஹதிசா பாலம் பகுதியில் வைத்து இம்ரானைப் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த தகவலின் பேரில் உயிரிழந்த பெண்ணின் செல்போன் மீட்கப்பட்டது.