இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே?

By Manikanda Prabu  |  First Published Dec 20, 2023, 1:12 PM IST

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை மம்தா பானர்ஜி முன்மொழிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மக்களவை தேர்தல் முடியும் வரை இந்தியா கூட்டணி தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்காது என்று கூறி வந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, நேற்றைய இந்தியா கூட்டணியின் கூட்டத்தின்போது, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஒரு முக்கிய தலித் முகமாக இருப்பதால், மம்தாவின் முன்மொழிவு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றதாக அத்தகவல்கள் கூறுகின்றன.

Latest Videos

undefined

பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும், மூன்றாவது கூட்டம் செப்டம்பர் மாதம் மும்பையிலும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. 

மொத்தம் 28 கட்சிகள் தற்போது இந்தியா கூட்டணியில் உள்ளன. அதில், 12 கட்சிகள் மம்தாவின் முன்மொழிவை பாராட்டியதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் உரசல் போக்கை கடைப்பிடிக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட இந்த யோசனையை ஆதரித்துள்ளதாக தெரிகிறது. தலித் ஒருவர் முதன்முறையாக நாட்டின் பிரதமராக இரு ஒரு வாய்ப்பு என கெஜ்ரிவால் கூறியதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

ஆனால், இந்த முன்மொழிவை கண்ணியமாக மறுத்த மல்லிகார்ஜுன கார்கே, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட வேண்டும் என்பது மட்டுமே தனது விருப்பம் என கூறிவிட்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

பின்னர் பிரதமர் வேட்பாளர் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மல்லிகார்ஜுன கார்கே, “நாங்கள் முதலில் வெற்றி பெற வேண்டும், வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அதற்கு முன்பு பிரதமர் வேட்பாளரை பற்றி விவாதிப்பதில் என்ன பயன். நாங்கள் ஒன்றாக பெரும்பான்மையைப் பெற முயற்சிப்போம்.” என்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தலின் போது, பட்டியல் சமூகத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த திரௌபதி முர்மு ஆகியோருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியை ஆளும் பாஜக கடுமையாக விமர்சித்தது. காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிராகச் செயல்படுவதாக பாஜக அப்போது குற்றம் சாட்டியது.

எம்.பிக்கள் இடைநீக்கம்: டிசம்பர் 22இல் இந்தியா கூட்டணி நாடு தழுவிய போராட்டம்!

பிரதமர் வேட்பாளராக கார்கேவுக்கு கிடைத்த இந்த பரவலான அங்கீகாரம் எதிர்க்கட்சிகள் மத்தியில் அவரது மதிப்புமிக்க அந்தஸ்தை காட்டுவதாக கருதப்படுகிறது. ஆனால், மறுபுறம் அந்த பதவிக்கு எதிர்பார்க்கப்படும் ராகுல் காந்திக்கு இது ஒரு ஏமாற்றமாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் எப்போதும் பிளவுபட்டே காணப்படுகிறது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜின கார்கே, சர்ச்சைக்குரிய தொகுதி பங்கீடு விவகாரம் மாநில அளவில் கையாளப்படும் என்றார். அதில், ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், மத்திய அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை முடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!