Latest Videos

விமான விபத்தில் மலாவி துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உயிரிழப்பு!

By Manikanda PrabuFirst Published Jun 11, 2024, 5:37 PM IST
Highlights

விமான விபத்தில் மலாவி நாட்டு துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடானா மலாவி நாட்டு துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா மற்றும் 9 பேரை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம் நேற்று மாயமானது. முன்னாள் அமைச்சரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டு தலைநகர் லிலோங்வேயில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 9:17 மணிக்க, துணை அதிபர், முன்னாள் முதல் பெண்மணி ஷனில் டிசிம்பிரி (Muluzi) உள்ளிட்ட 10 பேரை ஏற்றிக் கொண்டு கிளம்பிய ராணுவ விமானம், Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானியால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை.

இதனால், விமானத்தை மீண்டும் லிலோங்வேவுக்கு திருப்ப அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே, விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து, மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. விமானம் கண்டுபிடிக்கப்படும் வரை தேடும் நடவடிக்கையை தொடர மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், விமான விபத்தில் மலாவி நாட்டு துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையால் விமானம் நேற்று விபத்துக்குள்ளானதையடுத்து, நேற்று காலை முதல் தேடுதல் பணி நடைபெற்றுப் வந்த நிலையில், துணை அதிபர் உட்பட விமானத்தில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

விமானத்தின் உடைந்த பாகங்கள் பனிமூட்டமான காட்டில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்த நாட்டு அதிபர் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார். “தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் விமானத்தை கண்டுபிடித்துள்ளனர். முற்றிலும் சேதமடைந்துள்ள அந்த விமானத்தில் உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் விபத்தில் உயிரிழந்து விட்டனர்.” என நாட்டு மக்களிடம் உரையாற்றிய மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா தெரிவித்துள்ளார்.

சாதி மறுப்பு திருமணம்... மனைவி மீதான காதல்... நிதிஷ்குமாரின் மறைக்கப்பட்ட கதை..!

முதன்முதலில் 2014ஆம் ஆண்டில் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட சவ்லோஸ் சிலிமா, தனது கவர்ச்சிகரமான பேச்சாற்றலால் மலாவியில், குறிப்பாக இளைஞர்களிடையே பரவலாக விரும்பப்படும் நபராக இருந்தார். ஆனால் 2022 ஆம் ஆண்டில், தனது இரண்டாவது ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ்-மலாவிய தொழிலதிபர் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழலில் கைது செய்யப்பட்டு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானதையடுத்து சவ்லோஸ் சிலிமாவின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. கடந்த மாதம், அந்நாட்டு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்ததையடுத்து, மீடும் அவர் தனது உத்தியோகபூர்வ பணிகளை தொடங்கிய நிலையில், விமான விபத்தில் மலாவிய துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா காலமானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“சிலிமா ஒரு நல்ல மனிதர், அர்ப்பணிப்புள்ள தந்தை மற்றும் கணவர். தேசபக்தியுள்ள குடிமகன், அவர் தனது நாட்டிற்கு தனித்துவத்துடன் சேவை செய்தவர். வலிமையான துணை அதிபர். கடந்த நான்கு ஆண்டுகளாக துணை அதிபர் மற்றும் ஆலோசகராக அவரைப் பெற்றது என் வாழ்வின் மிகப் பெரிய கௌரவங்களில் ஒன்றாக நான் கருதுகிறேன்.” என மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

click me!