அடித்து நொறுக்கப்பட்ட தேசப்பிதா காந்தி சிலை..! குஜராத்தில் சமூக விரோதிகள் அட்டூழியம்..!

By Manikandan S R SFirst Published Jan 5, 2020, 11:11 AM IST
Highlights

குஜராத்தில் மகாத்மா காந்தியின் சிலையை மர்மநபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர்.

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் இருக்கிறது ஹரிகிரிஷ்ணா ஏரிக்கரை. இது பிரபல வைர வியாபாரியான சவ்ஜிபாய் தோலக்கியாவின் அறக்கட்டளை சார்பாக கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் மோடி இந்த ஏரிக்கரையை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அதன்பின்னர் 2018ம் ஆண்டு தேசத்தந்தை மஹாத்மா காந்தியின் சிலை அங்கு நிறுவப்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சமூக விரோதிகள் சிலர் மகாத்மா காந்தி சிலையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். காலையில் அந்த பகுதி மக்கள் சிலை உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் அங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பை பலப்படுத்தினர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலையும் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. அதே போல அங்கிருந்த 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளையும் மர்ம நபர்கள் பிடுங்கி வீசியுள்ளனர். தொடர் சம்பவங்கள் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!