மகாராஷட்ராவில் நக்சலைட் தாக்குதல் !! வாகன அணி வகுப்பில் பங்கேற்ற 15 கமாண்டோக்கள் பலி !!

By Selvanayagam PFirst Published May 2, 2019, 7:36 AM IST
Highlights

மகாராஷ்டிர மாநிலத்தில், பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது, நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில், 15 வீரர்கள் பலியாகினர். கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான, 25 வாகனங்களையும், நக்சலைட்டுகள் தீ வைத்து எரித்தனர்.

மகாராஷ்டிராவில், கட்சிரோலி உள்ளிட்ட மாவட்டங்களில், நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இங்குள்ள தாதாபூர் பகுதியில், சாலை பணிகள், ஒரு மாதமாக நடந்து வருகின்றன. தனியார் கட்டுமான நிறுவனம், இந்த பணிகளை மேற்கொள்கிறது. 

இந்நிலையில், நேற்று சாலை பணிகள் நடந்து வரும் இடத்துக்கு, பயங்கர ஆயுதங்களுடன் நக்சலைட்கள் வந்தனர். கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான, 25 வாகனங்களை, நக்சலைட்கள் தீ வைத்து எரித்து விட்டு, தப்பி ஓடினர். இதையடுத்து, அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, மகாராஷ்டிர மாநில, நக்சல் ஒழிப்பு படையைச் சேர்ந்த, கமாண்டோ வீரர்கள், இரண்டு வாகனங்களில் சென்றனர்.

குர்கெதா என்ற பகுதியை, அந்த வாகனங்கள் கடந்தபோது, மறைந்திருந்த நக்சலைட்கள், வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்; கண்ணி வெடிகளையும் வெடிக்கச் செய்தனர். இதில், இரு வாகனங்களும் வெடித்துச் சிதறின.

இந்த தாக்குதலில் வாகனங்களில் இருந்த, 15 வீரர்கள், உடல் சிதறி பலியாகினர். டிரைவர் ஒருவரும், இந்த தாக்குதலில் இறந்தார். தகவல் அறிந்து, கூடுதல் படையினர், அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். 

இதற்குள், தாக்குதல் நடத்திய நக்சலைட்டுகள் தப்பி ஓடினர். அவர்களை தேடும் பணி, முடுக்கி விடப்பட்டுள்ளது. நக்சல் தாக்குதலை அடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் உதயமானதன், 50வது ஆண்டு விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, கவர்னர் வித்யாசாகர் அறிவித்தார். ஆண்டு விழா நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்று மாலை, பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. 

click me!