ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக சிவ சேனா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

By Dhanalakshmi GFirst Published Jun 29, 2022, 10:35 AM IST
Highlights

மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் நாளை சிவ சேனா கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்து இருந்தார். இதை எதிர்த்து சிவ சேனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. சிவ சேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அந்தக் கட்சியின் அமைச்சரும், முக்கிய தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அணி திரண்டனர்.

இவர்கள் துவக்கத்தில் குஜராத் மாநிலத்தில் தங்கி வந்தனர். பின்னர் அசாம் மாநிலம் கவுகாத்தி சென்றனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருவது தங்களுக்கு சம்மதம் இல்லை என்றும் அந்த கூட்டணியில் இருந்து சிவ சேனா வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர். தாங்கள் சிவ சேனா நிறுவனர் பாலசாகேப் தாக்கரேவின் கொள்கைகளை பின்பற்றி வருவதாக தெரிவித்து வந்தனர்.

தன்னிடம் 38 சிவ சேனா எம்.எல்.ஏக்கள் இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து வந்தார். இவர்களில் 16 பேருக்கு சட்டசபை துணை சபாநாயகர் தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீஸ் அனுப்பி இருந்தார். ஆனால், இந்த நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.

இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த வழக்கை ஜூலை 11ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. 

இதற்கிடையே நாளை சிவ சேனா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கோஷ்யாரி கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு சிவ சேனா கண்டனம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது பெரும்பான்மை நிரூபிக்க அழைப்பு விடுத்து இருப்பது சட்டத்திற்கு எதிரானது என்று சிவ சேனா தெரிவித்துள்ளது.


முன்னதாக இன்று மும்பையில்  தான் இருக்கப் போவதாக ஏக்நாத் தெரிவித்து, ஆளுநரின் அழைப்பையும் வரவேறுள்ளார். இதற்கிடையே நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு, மும்பை வந்திருந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ஆளுநர் கோஷ்யாரியையும் சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், பலத்தை நிரூபிக்க சிவ சேனாவுக்கு அழைப்பு விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கோஷ்யாரி தெரிவித்துள்ளார். 

நாளை மாலை ஐந்து மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் இந்த நடைமுறைகள் அனைத்தும் வீடியோவில் பதியப்படும் என்று ஆளுநர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சிவ சேனா உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த வழக்கு இன்று மாலை 5 மணிக்கு  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

click me!