மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பானி பூரி வியாபாரி 20 ரூபாய் பாக்கி தொகையைக் கேட்டதற்காக கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூர் நகரில் சாலையோரம் பானி பூரி கடை வைத்துள்ளார் ஜெய்ராம் குப்தா. இவர் கடை போட்டிருக்கும் பகுதிக்கு அருகே வேறொரு கடையில் வேலை பார்க்கும் ஒருவர் இவரிடம் கடன் சொல்லி பானி பூரி வாங்கித் தின்றுள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கடன் பாக்கி வைத்திருக்கும் நபரிடம் 20 ரூபாய் பாக்கியைத் தருமாறு கேட்டிருக்கிறார் ஜெய்ராம். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாய்ச்சண்டை முற்றியதில் திடீரென ஜெய்ராம் குப்தாவை அந்த நபர் வயற்றில் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றி நாக்பூர் காவல்துறையினர் கூறுகையிர், “கத்தியால் குத்தப்பட்ட ஜெயராம் குப்தா இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இதேபோன்ற சம்பவம் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள டீக்கடையில் நடந்தது. டீ குடிக்க வந்தவர் டீ நன்றாக இல்லாததால் டீக்கடைக்காரர் முனாஃப்பை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த டீக்கடைக்காரர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, உயிருக்குப் போராடி வருகிறார்.